

மத்திய அரசால் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (Minimum Support Price - எம்எஸ்பி) அடிப்படையில் பயிர்ச் சாகுபடி முடிவுகளை விவசாயிகள் எடுக்கிறார்களா என்பது இந்திய வேளாண் கொள்கை வகுப்பாளர்களுக்கு நீண்ட காலப் புதிராகவே உள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க வேளாண் பொருளாதார அறிஞர் மார்க் நெர்லோ (Marc Nerlove), 1956இல் ஓர் ஆய்வறிக்கையை முன்வைத்தார்.
பயிர்களின் கடந்த கால விலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப விவசாயிகள் பயிர்ச் சாகுபடிப் பரப்பளவை நிர்ணயம் செய்வதாக நெர்லோவின் கோட்பாடு சொல்கிறது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு எம்எஸ்பி ஆதரவு விலை மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், நெர்லோவின் கண்டுபிடிப்பு இந்தியாவின் வேளாண் கொள்கை விவாதங்களில் இன்றும் எதிரொலிக்கிறது.