

தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாடு முழுக்க அந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.
டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விலங்கு நல அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பி பேரணி நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நாடு முழுக்க பொதுமக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து நாய்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வாயில்லா ஜீவன்களை காப்பகத்தில் அடைக்க உத்தரவிடுவது மனிதத் தன்மையற்ற செயல் என்றும், அந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோரும் நாய்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
மறுபுறம் நாய்களுக்கு எதிரான குரலும் ஓங்கி ஒலித்து வருகிறது. குழந்தைகள் தெருக்களில் பாதுகாப்பாக விளையாடச் செல்வதே முக்கியம் என்று எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘‘மனித உயிரே முக்கியம். விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களிடம் மட்டும் ஏன் கரிசனம் காட்டுகின்றனர். எலி, கரப்பான்பூச்சி, புழு, கரோனா வைரஸ் போன்றவையும் கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்கள் தானே? அவற்றிடமும் கரிசனம் காட்ட வேண்டியது தானே? கோழி, மீன் போன்ற உயிர்களைக் கொன்று, சமைத்து சாப்பிடுகிறீர்களே?’’ என்றெல்லாம் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவாதம் இரண்டு பிரிவாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால், இதற்கு முடிவு இருப்பதாக தெரியவில்லை. தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து, அதற்கு உணவளித்து, பராமரிப்பது என்பது சாத்தியமற்றதாகும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பதற்காக அதை செயல்படுத்துவதைப் போல் அதிகாரிகள் பாவனை காட்டுவார்களே தவிர, உண்மையில் செயல்படுத்துவது சிரமமான காரியம்.
உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரத்தின்படி, 2024-ல் மட்டும் இந்தியாவில் 37 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 305 பேருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளே பெரும்பாலும் நாய்க்கடி பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த அவலத்தை தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரம் எது சாத்தியம் என்பதை ஆராய்ந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுப்பதே சிறந்த முடிவாக அமையும்.
நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாடு மேற்கொள்வதும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுமே இப்போதைக்கு நம் கையில் உள்ள தீர்வாகும். இதிலுள்ள சிக்கல்களைக் களைந்து ஆண்டுக்கொரு முறை பெரிய அளவில் நாடு முழுக்க இப்பணியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதனை மேற்கொள்ளும்போது நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.
மனிதர்களை பாதுகாக்க நாய்களை அழிக்க முயல்வது எந்த வகையிலும் தீர்வாகாது. மனித இனத்தின் பாதுகாப்பு, விலங்குகளின் மீதான அக்கறை இரண்டுக்கும் இடையே சமநிலை பேணும்போது தீர்வு கிட்டும்.