

கன்னட இலக்கியச் செயல்பாடுகளை இணையம் வழியாக, உலக அளவில் விரிவாகக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிக்கெ. கடந்த நான்கு ஆண்டுகளாக புக் பிரம்மா ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பல புத்தக வெளியீடுகளையும், எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அர்ப்பணிப்போடு கூடிய பணிகளாலும் வெளிப்படைத்தன்மை கொண்ட செயல்பாடுகளாலும் குறுகிய காலத்திலேயே எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக புக் பிரம்மா விளங்கத் தொடங்கியது.
தென்னிந்திய அளவில் நான்கு மொழிகளையும் சேர்ந்த படைப்பாளிகளை, ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து உறவாடுவதற்கு இசைவாக ஓர் இலக்கியத் திருவிழாவை நடத்தும் திட்டம் 2024இல் முதன்முதலாக நிறைவேறியது. அத்திருவிழாவுக்குக் கிடைத்த வெற்றியின் விளைவாக, இரண்டாவது தென்னிந்திய இலக்கியத் திருவிழாவை பெங்களூரில் இம்மாதம் 8,9,10 ஆகிய மூன்று நாட்களில் மிகப்பெரிய அளவில் புக் பிரம்மா டிரஸ்ட் நடத்தி முடித்துள்ளது.