

தமிழில் இயங்கிவரும் வரலாற்று ஆய்வாளர்களில் முக்கியமானவர் பழ.அதியமான். இலக்கியம், வரலாறு என இரண்டிலும் ஆழமான தேடல்களுடன் பல நூல்களை எழுதியிருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், திராவிட இயக்கம் தொடர்பான அவரது நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் தமிழ் வாசிப்புத் தளத்தில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியவை. சுதந்திர தினத்தை முன்னிட்டு அவருடன் ஒரு பேட்டி:
வரலாறு, உலக நடப்புகள் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானது இந்தியாவின் வளர்ச்சியை எப்படிக் கட்டமைத்தது? - நவீன இந்தியா என்றதும் நேருதான் நம் நினைவில் முந்துகிறார். அவருக்குப் பிறகு நிதானம், உறுதி, தொழில்நுட்பப் பரவலாக்கம், தாராளமாக்கம், துறை அறிவு, வேகம் போன்ற திறமை படைத்த பத்துக்கும் மேற்பட்டோர் பிரதமர்களாக வந்தார்கள், போனார்கள். ஆனால் நாட்டினை நவீனமாக்கிய வரலாற்று வாய்ப்பு நேருவுக்குத்தான் கிடைத்தது.