

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளன. 2024-2025ஆம் நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9.63 சதவீதம் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 2025-2026ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக, சேவைத் துறைகளான தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சுற்றுலா, குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, நிதிச் சேவை போன்ற துறைகள் மட்டும் 12.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட அதிகம்.
இதற்கு முக்கியக் காரணியாக விளங்கியது மின்சாரம். தமிழ்நாட்டில் தரமான, தடையில்லாத, மலிவு விலையில் மின்சாரத்தை வழங்கியதால்தான் அனைத்துத் துறைகளும் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட, மின் வாரியத்தின் மூலம் ஸ்மார்ட் மீட்டர் (Smart Meter) பொருத்திய பிறகே அத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு கூறுவது சர்ச்சையாகியிருக்கிறது.