

ஐக்கிய நாடுகள் அவையின் உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து அறிக்கை ஐ.நா. துணை அமைப்புகளால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2024இல் ஐந்து வயதுக்கும் குறைவான 18.7% குழந்தைகள் உடல் எடை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது உலகிலேயே மிக அதிகமான விகிதம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து நிலை அறிக்கை, ஐந்து ஐ.நா. அமைப்புகளால் (FAO, IFAD, UNICEF, WFP, WHO) ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இது பசி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறித்த தரவுகளையும், பகுப்பாய்வையும் வழங்குகிறது. சமீபத்திய அறிக்கையில், இந்தியக் குழந்தைகள் - பெண்களின் ஊட்டச்சத்து குறித்த தரவுகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன.
அறிக்கை என்ன கூறுகிறது? - இந்தியாவில் சுமார் 2.1 கோடி குழந்தைகளுக்கு, உணவின் அளவு - தரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அடிக்கடி உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம் இல்லாமல் உள்ளனர். இது ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. மேலும், ஐந்து வயதுக்குக் கீழே உள்ள 3.74 கோடி குழந்தைகள் உயர வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில், 15-49 வயதுடைய பெண்களில் ரத்தசோகை பாதிப்பு தீவிரமாக உள்ளது. 2012இல் இந்தியாவில் 50.1% பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023இல் 53.7% பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு அதிகமாக உள்ளது. ரத்தசோகை பாதிப்பில் உலகளவில் காபான், மாலி, மோரடேனியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்து 4ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
காரணங்கள்: தேசியக் குடும்ப நல ஆய்வு 5 தரவின்படி, இந்தியக் குழந்தைகளில் உயர வளர்ச்சிக் குறைவு 35.5% ஆகவும், எடை குறைவு 19.3% ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வறுமை, சமத்துவமின்மை, போதிய உணவின்மை, கல்வி, மருத்துவ வசதிகள் குறைவாகக் கிடைத்தல் போன்றவை ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணங்கள்.
குறிப்பாக, புலம்பெயரும் குடும்பங்களில் இப்பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. 2006 முதல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்திருக்கிறது. அதன்படி 2006இல் இந்தியாவில் 24.3 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2024இல் இந்த எண்ணிக்கை 17.2 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், 2024இல் இந்திய மக்கள்தொகையில் ஏறக்குறைய 12% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
2012 முதல் 2024 வரை, ஐந்து வயதுக்குக் கீழ் உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 27 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரியவர்களில் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருந்தாலும், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறாக, இந்தியா ஊட்டச்சத்துக் குறைபாடு - உடல் பருமன் என இரட்டைச் சுமையைத் தாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
விலைவாசி உயர்வு? - உலகளவில், 204 நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு - பட்டினியில் 48ஆவது இடத்தில் இந்தியா உள்ளது; ஆசிய அளவில் சிரியா, ஆப்கானிஸ்தான், கிழக்கு திமோர் (Timor-Leste), பாகிஸ்தான், இராக், ஜோர்டான் ஆகியவற்றைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது, ஆரோக்கியமான - சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்க முடியாத அளவுக்கு உணவை உட்கொள்ளாதவர்களின் விகிதத்தைக் குறிக்கிறது. இதுவே, ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பின்மையை அளவிடுவதற்கு முக்கியமான அளவீடாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை விலைவாசி உயர்வு காரணமாக, ஆரோக்கியமான உணவு 42.9% மக்களுக்குக் கிடைப்பதில்லை என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2017இல் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.124 ($2.77 - வாங்கும் சக்தி அளவீடு) ஆக இருந்த ஆரோக்கியமான உணவின் விலையானது, 2024இல் ரூ.340 ($4.07) ஆக உயர்ந்துள்ளது. நாளும் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வானது மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது.
தீர்வுகள்: பலதரப்பட்ட சத்துக்களை உள்ளடக்கிய உணவு, போதுமான அளவு புரதங்களைக் கொண்டது என்பதால், அதைக் குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. அதன்படி, மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி - பொது விநியோகத் திட்டம் மூலம் சத்தான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வளர்ச்சி குன்றிய சிறார்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் நடவடிக்கைகளில் மத்திய / மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை போன்றவற்றுக்கு முடிவுகட்ட, இரும்புச் சத்து நிறைந்த சத்தான உணவு வகைகள் சிறாருக்குக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதை உறுதிசெய்யும் ஆய்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகள் - குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, விட்டமின் ஏ, மற்ற சத்துக்கள் வழங்கப்பட வேண்டும். ரத்தசோகையைக் குறைக்க இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, ஹீமோகுளோபினின் முக்கியத்துவம், இரும்புச்சத்தின் தேவை ஆகியவை குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அரசு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆரோக்கியமான உணவு வகைகள் மலிவு விலையில் கிடைக்க, அரசு மானியங்கள் - விலை கட்டுப்பாடு நடவடிக்கைகள் அவசியம்.
அரசு - தனியார் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, மேம்பட்ட அரசுத் திட்டங்கள், விவசாய மேம்பாடு, சுகாதாரக் கல்வி மூலம் இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்கலாம்.