

சமூகநீதி பேசும் தமிழ்நாட்டின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றிருப்பதாகச் செயல்பாட்டாளர்களின் தரவுகள் கூறுகின்றன.
இந்நிலையில், இந்த முறையும் ஆணவக் கொலை களுக்கு எதிரான சட்டம் குறித்த விவாதங்களும், தனிச்சட்டம் இயற்றியாக வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்துவருகின்றன. மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், சிவில் சமூகத்தினர் எனப் பலரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தபோதும், தமிழ்நாடு அரசு தற்போது இருக்கும் சட்டங்களே போதுமானவை எனக் கருதுகிறது.