

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டுக்காகக் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன. கடந்த ஆண்டைவிட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகக் கல்லூரி முதல்வர்களும் உயர் கல்வித் துறை அமைச்சரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கும் உயர்கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio) இன்னும் அதிகரிக்கும் என்பது தமிழகத்துக்குப் பெருமை. இந்த வெற்றி விருட்சத்தின் பல வேர்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட எதிர்பாராமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உயர்ந்து வந்தி ருக்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளின் மாணவர்களும், அவர்களின் கல்விக் கனவு நிறைவேறத் துணை நிற்கும் ஆசிரியர்களும்தான்.