

உலகில் தமிழ்மொழி ஏற்றம் பெற்றிருக்கும் நாடுகளில் முதன்மையானது சிங்கப்பூர். இங்கு ஆட்சி மொழியாகத் தமிழ் இருப்பது இதற்கு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட 150 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது சிங்கப்பூர் தமிழ் இலக்கியம். தொடக்க காலத்தில் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் படைத்தவர்கள், தமிழ்நாட்டு பாணியிலேயே கவிதை இலக்கியங்களைப் படைத்தனர். அதில் இஸ்லாமியக் கவிஞர்களின் பங்கும் பெருமளவில் இருந்தது. இஸ்லாம் மதம் சார்ந்த நூல்களும் படைக்கப்பட்டன.
‘பினாங்கு தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம்’ (முத்துக் கருப்பன் செட்டியார்), ‘முனாஜாத்துத் திரட்டு’ (முகமது அப்துல்காதர்), சிங்கப்பூர் தேங் ரோடு சுப்ரமணியரைப் பற்றிய ‘சிங்கைநகர் அந்தாதி’ (சதாசிவப் பண்டிதர் எழுதியது) உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் பரவலாக வெளியாகின. 1952இல் கோ.சாரங்கபாணியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள், சிங்கையில் அதிக அளவில் இலக்கியப் படைப்புகள் வெளிவர ஊக்கம் கொடுத்தன.