

நுகர்வோர் பாதுகாப்பில் தேசிய அளவிலான மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் வழிவகுத்த அமைப்பு ‘தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு’. 1974இல் திருச்சியில் தொடங்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த அமைப்பின் செயலாளரான எஸ்.புஷ்பவனம், சமூகப் பிரச்சினைகளுக்காகச் சமரசமின்றிப் போராடுபவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். ஆங்கிலப் பேராசிரியர், சுயாதீனப் பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்ட புஷ்பவனத்தைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
1970களின் தொடக்கத்தில் அமைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அப்போது எப்படி இருந்தது? -அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்தது. நுகர்வோர் பட்ட இன்னல்கள் ஏராளம். அவர்களுக்காகப் பேச யாரும் இல்லை. அப்போதுதான் ராஜீவ் தாராநாத், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் இணைந்து இந்த அமைப்பை நான் தொடங்கினேன். முன்னதாக, 1969இல் மும்பையில் இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம், 1972இல் கொல்கத்தாவில் ஓர் அமைப்பு ஆகியவை தொடங்கப்பட்டன. மூன்றாவது திருச்சியில்தான்.