

1988ஆம் ஆண்டில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘புவி வெப்பமாதலும் அதனை மானிடச் சமூகம் எதிர்கொள்ளும் விதமும்’ என்கிற அறிவியல் மாநாட்டில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். “புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயரும். அதனால் கடல் நீர் கடற்கரைப் பகுதிகளில் உட்புகுந்து வாழிடங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி குறையும்.
மேலும் புவி வெப்பமடைவதால் புயல்களின் எண்ணிக்கையும் வலுவும் கூடும். அதன் காரணமாகவும் கடலோரப் பகுதிகளில் பெரும் சேதம் விளையும்” என்று விரிவாக எடுத்துரைத்தார். கூடவே, இப்பிரச்சினைகளின் தாக்கத்தை, தற்போது ‘அலையாத்திக் காடுகள்’ என்று அழைக்கப்படும் கண்டல் காடுகள் (Mangrove forests) பெருமளவில் குறைக்கும் என்றும் அறிவித்தார்.