

சில ஆளுமைகள் மறையும்போது அவர்களின் சொந்த வாழ்க்கை, குடும்பம் குறித்து நெருங்கிய நண்பர்களைத் தாண்டி மற்றவர்களுக்கு நினைப்பே எழ இயலாது. அண்மையில் மறைந்த கல்வியாளர் வே.வசந்தி தேவி, அவர்களில் ஒருவர். மக்களுக்கான செயல்பாடுகளுக்காக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்பவராக வசந்தி தேவி இருந்தார். தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளும் போராட்டக் களங்களும் மட்டுமே அவர் வெளிப்படும் இடங்களாக இருந்தன.
தாத்தா, தந்தையின் தொடர்ச்சியாக... வசந்தி தேவியின் வாழ்க்கைக் குறிப்பு, அவரின் தாத்தா, தந்தை ஆகியோர் குறித்த நினைவுகூரல் இன்றி முழுமை அடையாது. தாய்வழித் தாத்தாவான வெங்கல் சக்கரை செட்டியார், மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயிலும்போது அதன் முதல்வராக இருந்த வில்லியம் மில்லரின் விருப்பத்துக்குரிய மாணவராக இருந்தார்.