

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
தன் இயக்கத்துக்குத் தேவைப்படும் ஆற்றலுக்காக உணவை உட்கொண்டு, உடலின் திசுக்களில் ஆக்சிஜனைக் கொண்டு அந்த உணவை எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறுவது பல உயிரினங்களுக்கும் பொதுவானதாகும். இயற்கையே உயிர்செயல்பாட்டைப் பன்மைப்படுத்தி, அவற்றினுள் சிறிய விலங்கைப் பெரிய விலங்கு உண்பதான விரிவான ஒரு உணவுச் சங்கிலியை உருவாக்கி, உயிரின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துவதாகக் கூறலாம்.