பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து!

பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து!
Updated on
2 min read

ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்று வெளிவரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் போரில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா இரண்டு வாரங்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி மற்றும் அபராத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரின் போது ரஷ்யாவுக்கு எதிராக மற்ற நாடுகள் வர்த்தக தடை விதித்ததை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. 2022-க்கு முன்பு 0.2 சதவீதம் என்ற அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த இந்தியா குறைந்த விலையில் கிடைப்பதை பயன்படுத்தி, 35 முதல் 40 சதவீதம் வரை தற்போது கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

அமெரிக்க அதிபரின் மிரட்டலையடுத்து, மாற்று வழியை சிந்திக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. கூடுதல் வரி விதித்தால் மாற்று வழி என்ன இருக்கிறது என்று தெரிவிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை.

இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 72 முதல் 76 ரூபாய் வரை கிடைக்கிறது. வரிவிதிப்பு, அபராதம் போன்ற விவகாரங்களால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. விலை 100 முதல் 120 வரை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீண்டும் அரபு நாடுகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படும்.

இதனால், உற்பத்திச் செலவு அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தான் மக்களின் போக்குவரத்து, சரக்குகள் இடம்பெயர்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரம் என்பதால் அதன் பாதிப்பு மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.

அதன் தொடர்ச்சி பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் எதிரொலிக்கும் என்பதால், சவாலாக அமைந்துள்ள இந்த விவகாரத்தை சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மத்திய அரசு கையாண்டு நாட்டின் வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும்.-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in