

இலக்கியம் என்பது மொழியால் எழுதப்பட்டாலும் அது மொழியைத் தாண்டியது. ஆழ்ந்த அனுபவம், பாரம்பரிய அறிவு, உணர்வு, மரபு வழியாகப் பெற்ற பண்பாடு, அது உருவாக்கிய விழுமியங்கள் போன்றவை அர்த்தமுள்ள வகையில் பரிமாறிக் கொள்ளப்படுவது இலக்கியங்கள் வழியேதான். உலகமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் சூழல், உலக சமூகத்தில் ஏற்படுத்திய மாறுதல்கள் முக்கியமானவை. குறிப்பாக புலம்பெயர்வும் பன்முகப் பண்பாடும். இதற்கு இலக்கிய மொழிபெயர்ப்பு பாலமாகத் திகழ்கிறது! ‘மொழிபெயர்ப்பு’ என்பது தொழில்நுட்பச் செயல்பாடு அல்ல; அது ஓர் இலக்கிய நுட்பம்; ஒரு வகையான ஆக்கம்.
ஆங்கில இலக்கியச் சூழலில் மேற்கத்திய இலக்கியப் படைப்புகள் மேலோங்கியிருந்த நிலையில் ஆங்கிலம் தவிர்த்த பல்வேறு நாட்டு மொழி இலக்கிய ஆக்கங்கள் புதிய கோணத்தைத் தருவதுடன் புதிய வெளிச்சங்களையும் பாய்ச்சுகின்றன. உலக இலக்கிய வரலாற்றில் இந்த மாற்றம் ஓர் மறுமலர்ச்சி. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதாமல், ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் நேரடியாக எழுதப்பட்டு, அதன் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்களின் மனங்களில் இடம்பெற்று, புகழடைந்த படைப்புகள் ஏராளம்.