போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

போலி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கர்நாடக வழக்கறிஞர் கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக வெளிவந்துள்ளது.

“கர்நாடக வழக்கறிஞர் கவுன்சிலுக்கு தவறான தகவல்களை அளித்து, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் எல்எல்பி பட்டம் பெற்றதாக சான்றிதழ்களை சமர்ப்பித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு தாங்கள் படித்ததாக சொல்லப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் முகவரி கூட தெரிவதில்லை” என்று வழக்கறிஞர் கவுன்சில் தெரிவித்துள்ளது.

போலி சான்றிதழ்களுடன் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வந்த 300 முதல் 400 பேரை கடந்த 5 மாதங்களில் திருப்பி அனுப்பியிருப்பதாகவும் வழக்கறிஞர் கவுன்சில் தெரிவித்திருப்பது நிலைமை மோசமடைந்து வருவதையே காட்டுகிறது. ஏற்கெனவே பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களின் சான்றிதழ்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு சரிபார்ப்புக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தால் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி வழக்கறிஞர்கள் பிரச்சினை கர்நாடக மாநிலத்துக்கு மட்டுமானதல்ல, நாடு முழுக்க போலி வழக்கறிஞர்கள் உள்ளனர். நாட்டிலுள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்களில் 20 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. போலி வழக்கறிஞர்களைக் கண்டறிவதற்காக இந்திய பார் கவுன்சில் 2015-ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை துவங்கியது.

ஆனால், அந்தப் பணி இன்னும் நடைபெறுவதால் போலி வழக்கறிஞர்களை முழுமையாக அகற்ற முடியவில்லை. அவர்கள் போலியான பிணை உத்தரவுகளை காட்டி சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்துச் செல்லும் செயல்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற செயல்களை தடுப்பதற்காகவே ஆதார் கொண்டு வரப்பட்டது. ஆதாருடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்கும்போது, உண்மை எது, போலி எது என்று எளிதில் கண்டறிய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், ஆதாரையே போலியாக தயாரித்து விடுகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் போலி தூதரகத்தையே ஒருவர் நடத்தி வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் தூதரகம் நடத்தி ஹவாலா பரிவர்த்தனைகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோன்று போலி பல்கலைக்கழகங்கள் நடைபெறுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஆண்டுதோறும் அறிவிப்பு வெளியிட்டு, பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் வெளியிடுகிறது. போலியாக இயங்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு ஒதுங்கிக் கொள்வது வேடிக்கையான விஷயமாகவே அமைந்துள்ளது.

கல்விச் சான்றுகள், ஆவணங்கள், அரசு உத்தரவுகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டுமென்றால், அதன் உண்மைத்தன்மையை எளிதில் சரிபார்க்கும் வகையில் பொதுவான இணையதளம் இருப்பது அவசியம். தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் எந்த ஆவணத்தையும் சரிபார்த்து உண்மையை அறிந்து கொள்ள வசதிகளை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in