

பாண்டவபுரம் நாவலின் மறக்க முடியாத காட்சிப்பிம்பம் ஒரு பெண் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகும். கணவனால் கைவிடப்பட்ட தேவி என்ற இளம் பெண் ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் யார் வருகைக்காகவோ காத்திருக்கிறாள். அவளது கணவன் குஞ்ஞுகுட்டனுக்காகவா, அல்லது வேறு யாராவது வரப்போகிறார்களா எனத் தெளிவாகச் சொல்லப்படுவதில்லை. ஆனால் அவள் அன்றாடம் ரயில் நிலையம் வருகிறாள். கடைசி ரயில் போகும்வரை காத்திருக்கிறாள்.
அவளிடம் ஒருமுறை யாருக்காகக் காத்திருக்கிறாள் என ஸ்டேஷன் மாஸ்டர் கேட்கிறார். அவள் பதில் சொல்வதில்லை. வெறுமனே புன்னகை பூக்கிறாள். சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளரான சேது எழுதிய பாண்டவபுரம் நாவல் 1979-ல் வெளியானது இதனைக் குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார். ஆங்கிலம், பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், தற்போது பிரெஞ்சு மொழியிலும் வெளியாகியுள்ளது யார் வரப்போகிறார்கள் என்று தெரியாத போதும் தேவி விருப்பமான ஒருவருக்காகக் காத்திருக்கிறாள் என்பது புரிகிறது. நாம் செல்போன் யுகத்தில் வாழ் பவர்கள். ஆகவே வெளிநாட்டிற்கோ, வெளியூருக்கோ சென்றுள்ளவர்களுடன் நேரடி தொடர்பிலே இருக்கிறோம். எளிதாகப் பேசிக் கொள்கிறோம். வீடியோ காலில் முகம் பார்த்துச் சிரிக்கிறோம்.