

தமிழில் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இருப்போர், இரண்டு சாகித்திய விருதுகள் பெற்றோர், படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றோர், சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர், புதிய சிந்தனைகளைப் படைப்பில் தரும் தமிழாசிரியர், இதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ள படைப்பாளிகள், தொண்ணூறு வயதிலும் தொடர்ந்து எழுதுவோர், மரபுக் கவிதையோடு, புதுக்கவிதையும் எழுதுவோர் என்ற வகைகளில் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு வகையிலும் வெகுசிலரே இருப்பார்கள். ஆனால் இந்த வகைகள் அனைத்திலும் இடம்பெறக்கூடிய பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி ஒருவரே எனலாம்.
இலக்கிய அமைப்புகளோடு நட்பு பாராட்டி, அமைப்புக் கடந்த படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருவதே சிற்பியின் சிறப்பு. 1960கள் வரை பழந்தமிழைப் பற்றியே எழுதி வந்தது தமிழ்க் கவிதை உலகம். இந்நிலையில், பாரதி சொல்வது போல, ‘எளிய பதம், எளிய சொற்களில்’ உலகப் பார்வையோடு உள்ளூர் நடப்புகளையும் எழுதிய ‘வானம்பாடிகள்’ எனும் கவிஞர் குழு தமிழுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியது. அதில் முதன்மையானவர் சிற்பி. ‘வானம்பாடி’ - சிற்றிதழ்களைப் படித்த இளைஞர்கள் புதிதாய்ப் பிறந்தனர்.