

‘பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ என்றார் சீத்தலைச்சாத்தனார். ‘திருவள்ளுவரின் கருத்தை வாழ்க்கையில் பின்பற்றி இருந்தால் இந்தத் துன்பத்தை நீ அடைந்திருக்க மாட்டாய்’ என்று அமைகிறது அவர் கருத்து. இதன் அடிப்படையில் திருக்குறள் பணி செய்வதைத் தம் வாழ்வியல் கடமையாக வருவித்துக் கொண்டார் குன்றக்குடி அடிகளார். அடிகளாரின் இந்த வேட்கை அவர் அரங்கநாதராகத் திகழ்ந்த பிள்ளைப் பருவத்திலேயே அவருள் தளிர்க்கத் தொடங்கியது.
மாட மாளிகைகளற்ற ‘நடுவட்டு’ எனும் சிற்றூரில் அரங்கநாதர் பிறக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே வாசிப்பில் நாட்டம் செலுத்துகிறார். அவருக்கு நாளும் தஞ்சம் அளித்த ஜோதிகிளப் நூலகம் திடீரென ஒருநாள் அனுமதிக்க மறுக்கிறது. காரணம், வருணாசிரமம் என்று அறிந்தபோது அரங்கநாதர் மனம் தீயினாற் சுட்ட புண்ணாகிறது. இதனால், நண்பர்களோடு இணைந்து புது நூலகத்தை உருவாக்குகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை இதழுக்குச் சந்தா கட்டுகின்றனர். இருபது இதழ்கள் வாங்கப்படுகின்றன. வாசிப்புப் பழக்கம் வேகம் பெறுகிறது.