

‘அசோகர்’, ‘ரொமிலா தாப்பர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வரலாறு எனும் கற்பனை’, ‘வதைமுகாம்கள்’, ‘சே குவேரா’ உள்பட முக்கியமான அரசியல், வரலாற்று நூல்களை எழுதிவருபவர் மருதன். சமீபத்தில், இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாளர்களைச் சந்தித்து, நேர்காணல்களை நிகழ்த்திவரும் மருதனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
வரலாற்றை எப்படி வரையறுப்பது? உண்மையைக் கண்டறிவதுதான் வரலாற்றாளரின் பணியா? - வரலாறு என்பது கடந்த காலம் குறித்த தேடல். ஒரு வரலாற்றாசிரியர் தனது தேடலின் முடிவில், தான் கண்டடைந்ததைத் தனது பிரதியில் முன்வைக்கிறார். ஆனால், அவர் கண்டறிந்ததுதான் அறுதியான உண்மை என்று சொல்ல முடியாது. ஒரு வரலாற்று ஆசிரியர் தனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், கடந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்றொரு சித்திரத்தை வழங்குகிறார்.