

தேசிய இயக்கமும் திராவிட இயக்கமும் செழித்து வளர்ந்த தஞ்சை மண்ணில், பொதுவுடைமை இயக்கமும் வலுவாக வேர்கொண்டிருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சியின் விதவிதமான தடைகளை எதிர்கொண்டே அம்மண்ணில் பொதுவுடைமை இயக்கம் தழைத்து நின்றது.
போராட்டங்கள், சிறைத் தண்டனைகள், தலைமறைவு வாழ்க்கை என்று அரசு இயந்திரத்துடனான அரசியல் உரையாடல்கள் ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் வர்க்க எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அவ்வியக்கத்தின் தலைவர்கள் ஆளாகவும் பலியாகவும் நேர்ந்தது. அப்படி, தன்னுயிரை ஈந்து இயக்கம் வளர்த்த களப் போராளிகளில் ஒருவர் - ‘என்.வி.’ என அழைக்கப்படும் என்.வெங்கடாசலம்.