அதிகரிக்கும்  உடல் பருமன் | சொல்... பொருள்... தெளிவு

அதிகரிக்கும்  உடல் பருமன் | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

“லட்சக்கணக்கான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அது நாள்பட்ட நோயாக மாறிவருகிறது; நீரிழிவு நோய், இதயப் பிரச்சினைகளை உடல் பருமன் அதிகரிப்பதுடன், சில வகைப் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது” என உடல் பருமன் குறித்து, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 32 வருடங்களாக உடல் பருமனால் பாதிக்​கப்​படு​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது. அதேநேரத்​தில், ஊட்டச்​சத்துக் குறைபாடும் ஏறுமுகத்தில் இருப்பதாக மருத்துவ இதழான ‘தி லான்செட்’ நடத்திய ஆய்வில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

அதிகரிக்கும் உடல் பருமன்: மாறிவரும் வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், குறைவான தூக்கம், குறைவான உடல் உழைப்பு போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணிகள் எனக் கூறும் மருத்​துவர்கள், உடல், மன நலம் இரண்டிலும் உடல் பருமன் நீண்ட காலத்​துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்​றனர்.

இந்தியாவில் 18 வயதைக் கடந்தவர்​களுக்கான உடல் பருமன் அதிகரிப்பு விகிதம் வருடத்​துக்கு 5.2% ஆகவும், குழந்தை​களுக்கு 9.1% ஆகவும் உள்ளது. ஆண்களுடன் ஒப்பிடு​கையில் பெண்களே அதிக அளவில் உடல் பருமனால் பாதிக்​கப்​படு​கிறார்கள்.

உலகளவில்... 1990 முதல் 2022 வரையில் குழந்தைகள், இளம் பருவத்​தினரிடம் உடல் பருமன் பாதிப்பு 4 மடங்காக அதிகரித்​திருப்​பதாக, உலக உடல் பருமன் கூட்டமைப்பின் ‘வேர்ல்ட் ஒபிசிட்டி அட்லஸ் (World Obesity Atlas) இணையதளம் குறிப்​பிடு​கிறது. உலக மக்கள்​தொகையில் 260 கோடி பேர் உடல் பருமன் உடைய​வர்கள் என்கிறது இந்த இணையதளம்.

இதே போக்கு நீடித்​தால், அடுத்த 12 ஆண்டு​களில் உலக நாடுகளில் உடல் பருமனுடைய​வர்​களின் எண்ணிக்கை 400 கோடியைத் தாண்டக்​கூடும் எனவும் இந்த அமைப்பு கணித்​துள்ளது. மேலும், அடுத்த சில ஆண்டு​களில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் நடுத்தர வர்க்​கத்​தினரிடம் உடல் பருமன் அதிகரிக்கும் எனத் தரவுகள் தெரிவிக்​கின்றன.

என்ன காரணம்? - அதிகப்​படியான கொழுப்பால் உடல்நலன் ஆபத்து நிலைக்குச் செல்வதை உடல் பருமன் என உலகச் சுகாதார நிறுவனம் வரையறுக்​கிறது. அதாவது, உடல் நிறை குறியீட்டு எண் (Body Mass Index - BMI) 30க்கு மேல் அதிகமாக இருப்​பவர்கள் உடல் பருமன் கொண்ட​வர்களாக அறியப்​படுவர்.

அதேவேளை, உடல் நிறை குறியீட்டு எண் 18க்குக் கீழ் உடையவர்கள் ஊட்டச்​சத்து குறைந்​தவர்​களாகக் கருதப்​படுவர். பெற்றோர் உடல் பருமனால் பாதிக்​கப்​பட்​டிருந்​தால், மரபுரீ​தியாக அடுத்த தலைமுறைக்கும் இது கடத்தப்​படு​வதற்குச் சாத்தியம் உண்டு. கட்டுப்​பாடற்ற உணவு முறை, தைராய்டு பாதிப்பு, சில வகை மருந்து​களாலும் உடல் பருமன் அதிகரிக்​கக்​கூடும்.

தரவுகள்: கடந்த 30 வருடங்களாக இந்தியப் பெண்கள் உடல் பருமனால் பாதிக்​கப்​படுவது அதிகரித்​துள்ளது. 1990இல் 1.2%ஆக இருந்த பெண்களின் உடல் பருமன் விகிதம் 2022இல் 9.8%ஆக அதிகரித்​துள்ளது. 2022இல் இந்தியாவில் 4.4 கோடி பெண்களும், 2.6 கோடி ஆண்களும் உடல் பருமனால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சிறாரிடத்​திலும் உடல் பருமன் குறிப்​பி​டத்தக்க பாதிப்பை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. 2022இல் 7.3 கோடி சிறுவர்​களும், 5.2 கோடி சிறுமிகளும் உடல் பருமனால் பாதிக்​கப்​பட்​டுள்ளனர்.

பெண்களுக்குப் பாதிப்பு அதிகம் ஏன்? - இந்தியப் பெண்களில் பெரும்​பாலானவர்கள் உடற் ப​யிற்சி, நடைப்​ப​யிற்சி​களில் கவனம் செலுத்​தாதது உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாகிறது. குறிப்பாக, குழந்தைப் பிறப்​புக்குப் பிறகு ஹார்மோன்​களின் அதீதச் செயல்​பாட்​டினால் இயல்பாகவே பெண்களின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கு​கிறது.

இதைத் தவிர்த்துச் சரியான ஊட்டச்​சத்​துள்ள உணவுப் பொருள்களை நேரத்​துக்கு உட்கொள்​ளாததும், தேவையான தூக்கம் இல்லாததும் பெண்களின் உடல் பருமனுக்கான பிற காரணிகளாக உள்ளன. இதில் கிராமப்புறப் பெண்களைவிட நகரத்தைச் சேர்ந்த பெண்களே உடல் பருமனால் அதிக அளவு பாதிக்​கப்​படுவதாகத் தேசியக் குடும்ப நல ஆய்வு - 5 குறிப்​பிட்​டுள்ளது.

உடல் பருமனால் நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற நோய்களால் பெண்கள் பாதிக்​கப்பட சாத்தியம் இருப்​ப​தால், உடல்நலனில் பெண்கள் கூடுதல் விழிப்பு​ணர்​வுடன் இருப்பது அவசியம்.

என்ன செய்ய​லாம்? - தனிப்பட்ட முறையில் உடல் பருமனைக் குறைக்கத் தீவிர உணவுக் கட்டுப்​பாடும் உடற்ப​யிற்​சியும் அவசியம். பேக்கிங் செய்யப்பட்ட உணவு, துரித உணவு, கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவு வகைகளை முதலில் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், சிறுதானி​யங்கள், நார்ச்​சத்து, புரதச்​சத்தைக் கொண்ட சரிவிகித உணவு முறைக்கு மாறுவது உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

முறையான தூக்கத்தைக் கடைப்​பிடித்து, ஒரு நாளைக்குக் குறைந்தது 20 நிமிடங்​களாவது உடற்ப​யிற்​சியில் ஈடுபட வேண்டும். இவற்றைச் சரியாகக் கடைப்​பிடிப்பதன் மூலம் ஆரோக்​கி​யத்​துக்குத் தீங்கிழைக்கும் உடல் பரு​மனிலிருந்து ​விடுபட ​முடி​யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in