Published : 10 Jul 2018 07:31 AM
Last Updated : 10 Jul 2018 07:31 AM

பொய் புகார் அளித்தால் ரூ.1 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை: லோக் ஆயுக்தா சட்டப் பிரிவுகள் சொல்வதென்ன?

மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை (மையச் சட்டம் 1/2014) இயற்றியுள்ளது. அதன் பிரிவு 63-ன் படி ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்ற அமைப்பை நிறுவ வேண்டும். அதன்படி தமிழகத்தில் தற்போது பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு ‘தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் - 2018’ என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் - 2018 மொத்தம் 11 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதன்படி, முதல்வருக்கு ஆளுநர், அமைச்சர்களுக்கு முதல்வர், அமைச்சர்களை தவிர்த்து பிற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர், அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அரசு இயந்திரம் என்ற அளவில் இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக செயல்படுவர்.

அரசால் முழுவதுமாக அல்லது பகுதியாக நிதி அளிக்கப்பட்ட அமைப்பு, வாரியம், நிறுவனம், கழகம் மற்றும் தன்னாட்சி பெற்ற எந்தவொரு அமைப்பின் தலைவர், உறுப்பினர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்த சட்டத்தின் துணை கொண்டு விசாரிக்க முடியும்.

லோக் ஆயுக்தா அமைப்பு

அரசால் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து லோக் ஆயுக்தா என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இதன் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ, ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதி மற்றும் சட்டத் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நபராகவோ இருத்தல் வேண்டும். மேலும் 4 உறுப்பினர்கள் இதில் இடம்பெறுவர். அதில் இருவர் நீதித் துறையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், குற்றச் செயலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், ஊராட்சி, நகராட்சி உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அலுவலக ரீதியாக பொறுப்புக்கட்டளை அல்லது ஆதாயம் தரும் பதவி வகிப்பவர்கள், அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தொழில் செய்பவர்கள், பதவி வகிப்பவர்கள் லோக் ஆயுக்தாவின் தலைவராகவோ, உறுப்பினர்களாகவோ பதவியேற்க முடியாது.

3 பேர் கொண்ட தெரிவுக் குழு

லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை தயாரிக்க 3 பேர் கொண்ட தெரிவுக்குழு தனியாக அமைக்கப்படும். இவர்கள் ஊழல் தடுப்பு, பொது நிர்வாகம், நிதி மற்றும் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தெரிவுக் குழுவின் பரிந்துரைப்படி தலைவர், உறுப்பினர்கள் ஆளுநரால் பணியமர்த்தப்படுவர். தலைவரை முதல்வரும், மற்ற உறுப்பினர்களை சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது சட்டப்பேரவையில் பெரும்பான்மை உடைய எதிர்க்கட்சித் தலைவர் சேர்ந்து பரிந்துரைக்க வேண்டும்.

பதவிக்காலம் மற்றும் ஊதியம்

லோக் ஆயுக்தா தலைவரும் உறுப்பினர்களும் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை பதவி வகிக்கலாம். இதில் எது முந்தியதோ அதுவரை பதவி வகிக்க முடியும். லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம், படித்தொகைகளும் உறுப்பினர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான ஊதியம், படித்தொகைகளும் வழங்கப்பட வேண்டும்.

தலைவரோ, உறுப்பினரோ ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் அவர்கள் தானே எழுத்துபூர்வமாக ஆளுநருக்கு தெரிவிப்பதன் மூலம் பதவியில் இருந்து விலகலாம். இல்லாவிட்டால் இந்த சட்டத்தால் வகை செய்யப்பட்டுள்ள முறையில் அவர் வகித்து வரும் பதவியில் இருந்து நீக்கப்படலாம். பதவியை விட்டு விலகிய எவரையும் லோக் ஆயுக்தாவுக்கு தலைவராகவோ, உறுப்பினர்களாகவோ மீண்டும் பணியமர்த்தக் கூடாது. இறப்பு, பதவி விலகல் போன்ற நிகழ்வுகளின் காரணமாக தலைவர் பதவி காலியாகும்போது பணிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் ஒரு மூத்த உறுப்பினரை தலைவராக செயல்பட அதிகாரம் அளிக்கலாம்.

செயலாளர் மற்றும் இயக்குநர்

அரசின் துணைச் செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக இருத்தல் வேண்டும். அதுபோல அரசின் துணைச் செயலாளர் நிலைக்கு குறையாதவர் விசாரணை இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும். அரசிடம் இருந்து பெறப்பட்ட பட்டியலில் இருந்து இவர்களை தலைவரே தேர்வு செய்து நியமிப்பார். இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக தேவையான அலுவலர்கள், பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

பொது ஊழியர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதையும் விசாரணை செய்யும் நோக்கத்துக்காக இயக்குநரின் தலைமையில் விசாரணைப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும். இதற்காக தேவைப்படும் துறை அலுவலர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள், செயலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கான செலவினங்கள், ஊதியங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் அடங்கிய நிர்வாகச் செலவினங்களை மாநில தொகுப்பு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். லோக் ஆயுக்தா வால் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், எடுத்துக்கொண்ட பிற தொகை நிதியத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

அதிகார வரம்பு

பதவியில் உள்ள அமைச்சர், முன்னாள் அமைச்சர், பதவியில் உள்ள எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ, 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2-ம் பிரிவின் வரையறைக்கு உட்பட்ட பொது ஊழியர்களான மாநில அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்கள்.

ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி ஊழலுக்கு தூண்டிவிடுதல், கையூட்டு அளித்தல், கையூட்டு பெறுதல், ஊழல் சதிச் செயலில் ஈடுபடுதல், பொது ஊழியரின் நடத்தை மற்றும் செயல் எதையும் இதன்மூலம் விசாரிக்க முடியும். ஆனால் ஏ, பி, சி, டி என எந்த பொது ஊழியர்கள் மீதான புகார் குறித்தும் முதல்நிலை விசாரணை நடத்தி அதன்பிறகு முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை பொறுத்தமட்டில் மத்திய அரசின் இசைவின்றி இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

அமைப்பின் வெளிப்படைத்தன்மை

லோக் ஆயுக்தாவின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள புகார்கள், முடிவு செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்து இணையதளம் மூலமாகவோ, விதிகளில் அறிவுறுத்தியபடியோ பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட சில நேரங்களில் உரிமை வழக்கை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்ற அதிகாரங்களை லோக் ஆயுக்தா பெற்றிருக்கும்.

லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் ஒரு ஊழியரை இடமாறுதல் செய்யவோ, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவோ அரசுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது.

பொது ஊழியருக்கு எதிராக பொய் புகார் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை உண்டு. அதேபோல லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள், பிற பணியாளர்களும் இந்த சட்டத்தின்கீழ் பொது ஊழியர்களாகவே கருதப்படுவர்.

லோக் ஆயுக்தாவில் அளிக்கப்படும் ஒரு புகார், குற்றம் நடைபெற்ற தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் கொடுக்கப்படவில்லை என்றால் அதன் மீது விசாரணை நடத்த முடியாது. உரிமையியல் நீதிமன்றங்கள் எதுவும் லோக் ஆயுக்தாவின் செயல்பாடுகளில் குறுக்கிட முடியாது. புகாருக்கு உள்ளான நபருக்கு தேவையான சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற ஷரத்துகள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

‘அரசியல் தலையீடு இல்லை’

‘பல் இல்லாத அமைப்பு’ என்று லோக் ஆயுக்தாவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திமுகவினர் ஊழலில் திளைத்தவர்கள். அவர்களுக்கு ஊழல் ஒழிப்பு என்றாலே கசக்கும். ஊழல் பட்டியலில் திமுக முன்னணி வகிக்கிறது. ஊழலை ஒழிக்க கடந்த 2013-ல் லோக்பால் சட்டம் தாக்கலானது. அதன்பின் 2014-ல் பிற மாநிலங்களில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்பட்டது. அப்போதே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த கூட்டத்தில், மற்ற மாநிலங்களை பார்த்து தமிழகத்திலும் சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின், மத்திய அரசு கொண்டுவரும் திருத்தங்களை எதிர்பார்த்தோம். ஆனால், உச்ச நீதிமன்றம் ஜூலை 10-ம் தேதிக்குள் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், இன்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற, சுதந்திரமான அமைப்பாகும். இதில் அரசியல் தலையீடே கிடையாது. உறுப்பினர்களை தெரிவுக் குழு தேர்வு செய்து, தேர்வுக் குழுவுக்கு அளிப்பார்கள். தேர்வுக் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், பேரவைத் தலைவர் உள்ளனர்.

தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படும் 5 பேரும் எல்லாவிதமான விசாரணைகளையும் மேற்கொள்வர். ஒருவர் மீது புகார் மனு அளித்தால் அதில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை 6 வாரத்துக்குள் முடிவு செய்து, 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை விசாரணை வரம்புக்குள் எல்லோரும் வருகிறார்கள். அவர்கள், மீது எந்த புகார் இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சட்டம் பொதுமக்களின் எதிர்பார்ப்பு. எனவே, முதலில் அமைப்பு வேலையை செய்யட்டும். அதன்பின் 3 ஆண்டுகளுக்குள் திருத்தம் வேண்டுமானால் செய்யலாம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

18 மாநிலங்களில்..

இந்தியாவில் 18 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான டெல்லி சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் தமிழகம், மேற்கு வங்கம், தெலங்கானா, காஷ்மீர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், மிசோரம், நாகாலாந்து ஆகிய 11 மாநிலங்கள், மற் றொரு யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. இங்கு ஜூலை 10-ம் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

தமிழக அரசின் லோக் ஆயுக்தா சட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கருத்து வருமாறு:

சட்டப் பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ: தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள லோக் ஆயுக்தா சட்டம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை. ஊழல் புகார் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை என்ற அம்சம் புகார் கொடுப்பதை தடுப்பதற்கான ஏற்பாடு. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு ஆணையம், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை கலைத்துவிட்டு லோக் ஆயுக்தா அமைப்புடன் இணைக்க வேண்டும். நாடு முழுவதுக்கும் பொதுவான தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல நாடு முழுமைக்கும் பொதுவான லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால்தான் மாநில அரசுகள் தங்கள் விருப்பம் போல லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்து அதனை நீர்த்துப் போகச் செய்வதை தடுக்க முடியும்.

அறப்போர் இயக்கத்தின் கன்வீனர் ஜெயராம் வெங்கடேசன்: பொதுமக்களிடம் கருத்து கோராமல் லோக் ஆயுக்தாவை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறோம். காரணம், இந்த சட்டத்துக்கு பற்கள் கிடையாது. இதன் நிர்வாகிகளை ஆளுங்கட்சியினரே தீர்மானிப்பர் என்பதும், எந்தவொரு காலவரம்பும் நிர்ணயம் செய்யவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. விசாரணைக் குழுவின் அதிகாரி போலீஸ் அதிகாரியாக இல்லாமல் துணைச் செயலாளர் விசாரிப்பது எப்படி சாத்தியமாகும்.

உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இந்த அமைப்புக்கு தரப்படவில்லை என்பதில் இருந்தே, ஊழல் அதிகாரிகளுக்கு துணைபுரியவே இது உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அதிகாரம் இல்லை.

அதேபோல 4 ஆண்டுகளுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க முடி யாது என்பதும் சரியான நடைமுறை இல்லை. 60 நாட்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடித்து 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணையை முடிக்க வேண்டும் என்பதும், தேவைப்பட்டால் 6 மாதம் நீட்டிக்கலாம் என்பதும் ஆறுதலான விஷயம்.

ஆனால், இந்த சட்டத்தின் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு மட்டும் தெளிவாக ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எடியூரப்பா பதவியை பறித்த லோக் ஆயுக்தா

கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பால் அம்மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலக நேர்ந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2 முதல்வர்கள் மாறியது, எடியூரப்பா தனி கட்சி தொடங்கியது, பிறகு பாஜகவில் இணைந்தது என கர்நாடகத்தின் அரசியல் போக்கே மாறியது. அதன்பிறகு இன்றுவரை பாஜகவால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இவ்வளவு அரசியல் மாற்றங்களுக்கு காரணமான, பாஜக முதல்வரை பதவியில் இருந்து விரட்டிய லோக் ஆயுக்தாவை காங்கிரஸ் அரசு நீர்த்துப் போகச் செய்துள்ளது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2016-ல் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தி லோக் ஆயுக்தாவை பல் இல்லாத ஆணையமாக மாற்றியது. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க, லோக் ஆயுக்தாவுக்கு சமமாக அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு அமைப்பையும் ஏற்படுத்த முடியாதபடி சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்தியில் தாமதமாகும் லோக்பால்

மாநிலங்களுக்கு லோக் ஆயுக்தா சட்டம்போல மத்திய அரசில் ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் அமைப்பை ஏற்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதை காரணமாகக் கூறி லோக்பால் அமைப்பதை மத்திய பாஜக அரசு தாமதப்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கொடுத்தால்தான் லோக்பால் அமைப்பில் இடம்பெறுவோம் என காங்கிரஸ் கட்சியும் கூறி வருகிறது.

லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் விசாரிக்க முடியும். லோக்பால் அமைக்கக் கோரி கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது சமூக சேவகர் அன்னா ஹசாரே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டம் மூலம் பிரபலமான அர்விந்த் கேஜ்ரிவால் ‘ஆம் ஆத்மி’ கட்சியை தொடங்கி தற்போது டெல்லி முதல்வராக இருந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x