

கடந்த மாதம் கவிஞர் சுகுமாரன் முகநூலில், “ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க / இரண்டுபேர் போதும் / எதிரியாக மாறிய நண்பனும் / நண்பனாக மாறிய எதிரியும் / ஒரு யுத்தத்தின் முடிவில் / ஐந்து பேர் எஞ்சுவார்கள் / இறந்தவன் ஒருவன் / சுமப்பவர் நால்வர் / ஒரு யுத்தம் / புதிய சாதிகளை உருவாக்குகிறது / அங்கவீனர்கள் / அநாதைகள் / கைம்பெண்கள் / தரித்திரர்கள் / கூடவே / மூடர்களை / கல்நெஞ்சர்களை” என்ற கவிதையைப் பகிர்ந்திருந்தார். போரின் அசல் முகத்தைச் சில சொற்களிலேயே எட்டிவிட்ட கவிதையிது. அந்த இரண்டுபேர் ஆரம்பித்த யுத்தம் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவுகளை நிகழ்த்திவிட்டுத்தான் முடிகிறது; சில முடியாமல் ஆண்டுக் கணக்காகக் கனன்றுகொண்டும் இருக்கிறது. பெரும்பாலும் இரு நபர்களுக்கு இடையிலான ‘தான்’ எனும் அகங்காரம்தான் யுத்தத்தைத் தொடங்கி வைக்கக் காரணமாகிறது. ஆனால் போரின் முடிவு தொடங்கியவர்களின் கையையும் மீறிச் சென்று விடுகிறது. உதாரணம், பாரதப்போர். யுத்தம் நடந்த நிலம் பழைய பாதைக்கு மீண்டும் திரும்புதல் என்பது ஒரு கனவைப் போன்றதுதான்.
நாட்டுப்பற்று, மொழிப்பற்றைப்போல வீரம் என்பதும் ஒரு போதையூட்டப்பட்ட சொல். ஐயனாரிதனார் பாடிய புறப்பொருள் வெண்பாமாலையில் குடிநிலையின் சிறப்பைக் கூறும்போது, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு / முன்தோன்றி மூத்த குடி” என்று எழுதிவிட்டுச் சென்றுவிட்டார். தமிழரின் பெருமிதத்தைக் கூறுவதற்காக இந்த அடிகள் ஒரு பழமொழிபோல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. ஐயனாரிதனார் கூறியதன் நோக்கமும் சூழலும் வேறு; ஆனால், தமிழர்களின் தொன்மையையும் வீரத்தையும் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான பொருத்தமான பாடலாக இது அமைந்துவிட்டது.