

பாற்கடலோ என்று மெச்சும் வகையில் தண்ணீர் வெள்ளமாகப் பொங்கி ஆர்ப்பரிக்கிறது. பருவகாலங்களில் அவ்வப்போது சிலர் எட்டிப்பார்க்கும் கல்லணையில் எங்கெங்கு காணினும் இப்போது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்தான். அங்கிருந்து பயணித்தால் அடுத்த 10 கி.மீ. தூரத்தில் கடையக்குடி கிராமத்தில் தொடங்கி வெண்டையம்பட்டி, பாலையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் வறண்டு பாலை நிலமாகத் தோற்றம் தருகின்றன.
இது 2025ஆம் ஆண்டின் காட்சி மட்டுமல்ல. 1980இலிருந்து பட்டியலிட்டால் 1980, 1981, 1992, 2005, 2007, 2018, 2021, 2022 உள்ளிட்ட ஆண்டுகளிலும் இதே நிலைதான். கல்லணையின் பாசன அமைப்பு ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வேளாண் வளர்ச்சியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த பெரும் பாய்ச்சல். அதே தருணத்தில்தான் இப்போது பாலைவனமாகத் தெரியும் இதே நிலத்தில் அமோகமான வேளாண் சாகுபடியும் நடந்துள்ளது.