

கேரம் விளையாட்டில் இரண்டு முறை உலக சாம்பியன்; ஒன்பது முறை தேசிய சாம்பியன் எனச் சாதனைகள் படைத்தவர் மரிய இருதயம். உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் தமிழர், கேரம் விளையாட்டுக்காக அர்ஜுனா விருது பெற்ற ஒரே இந்தியர் ஆகிய பெருமைகளுக்கும் உரியவர். தற்போது கேரம் வளர்ச்சிக்காகப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுவரும் அவருடனான நேர்காணல்:
நீங்கள் கேரம் விளையாட வந்த பின்னணி என்ன? - நான் முதலில் கால்பந்துதான் விளையாடிக்கொண்டு இருந்தேன். 12 வயதில் விளையாட்டின்போது கையில் அடிபட்டது. அதையடுத்து கேரம் விளையாட்டில் கவனம் திரும்பியது. அப்பா அந்தோணி சைமன் மத்திய அரசு நடத்திவரும் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். நாங்கள் வசிக்கும் சென்னை பெரியமேடு பகுதியில் இருந்த கபீர்தாஸ் என்கிற ரயில்வே ஊழியர் கேரம் விளையாட எங்களை ஊக்குவித்ததுடன், அதற்கான உதவிகளையும் செய்தார்.