

இரண்டரை வாரம் நீடித்த விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு ஷுபன்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பிவிட்டார். ஜூன் 26 அன்று ‘அக்சியம்-4’ திட்டத்தின் கீழ் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெகி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 14 அன்று புறப்பட்டு நேற்று பூமியை வந்தடைந்தனர்.
தகவமைப்புக் கட்டம்: விண்வெளிக்கு ஏவப்பட்ட 28 மணி நேரத்துக்குப் பின்னரே அக்சியம் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய முடிந்தது. விண்வெளியில் விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவை. விண்வெளியில் எல்லாமே மிதக்கிறது - நமது கைகள், கால்கள் உள்பட விண்வெளி நிலையத்தில் உள்ள பொருள்கள் எல்லாமே மிதந்தபடி இருக்கும். முதலில் இந்தப் புதிய சூழலில் எதையும் சரியாகக் கையாள முடியாமல் தடுமாறுவோம்.