

ஆகஸ்ட் 1 முதல் பல்வேறு நாடுகளுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக அளவிலான வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகச் சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்த நகர்வுகளில் மிகுந்த நிதானம் தேவை.
இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதாக விமர்சித்துவந்த டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு என்னும் பெயரில் அந்தந்த நாட்டின் வர்த்தகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அதிகவரிகளை விதித்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 1 முதல் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரி நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.