

காமராஜர் பற்றி எவ்வளவு பேசினாலும், எத்தனை முறை பேசினாலும் தீராது. பல வெற்றிகளைச் சுவைத்தவர் அவர். இந்தியாவின் தென்கோடியில் அன்றைய ‘விருதுப்பட்டி’ என்னும் விருதுநகரில் இருந்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள ‘ஜந்தர் மந்தர்’ வரை சென்று, இந்தியக் குடியரசின் நிலைப்பாட்டுக்கு உதவியதை, காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாகக் கூறலாம். படிப்பறிவின்றி, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக இளவயது வாழ்வைத் தொடங்கிய காமராஜர் - மிகவும் சாதாரணமானவர்.
அரசியல் வெற்றிகள்: 1920இல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வாழ்வை அனுபவித்தவர் காமராஜர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கும் சட்டதிட்டங்களுக்கும் அடங்கி, கட்சியைப் பாதுகாத்தார். நாட்டுக்காகச் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்தார்.