

பல இன மக்கள் வணிகத்தின் மூலமாகவும், மக்கள் இடப்பெயர்வின் மூலமாகவும், மணமுடித்தல் தொடர்பாகவும் மொழிக்கலப்பு என்பது இயற்கையான காலச்சூழலால் ஏற்பட்டுவிடுகிறது. சமூக நோக்கில் பல இன மக்கள் ஒன்றுகூடும்போது, தங்கள் மொழியுடன் வாழுகின்ற இடத்தில் பேசுகின்ற மொழியுடன் கலந்து உறவாடும் வேளையில், ஒரு புதிய மொழி இயல்பாகத் தோன்றுகின்ற காலச் சூழல் உருவாகிவிடுகிறது. இதுவே மொழிக் கலப்புக்கு அடிப்படையான காரணிகளாகும்.
தனித்தமிழ் இயக்கம்: தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்ததன் விளைவாகப் பல கிளைமொழிகள் தோன்றின என்பது வரலாற்று மொழியியல் அறிஞர்களின் முடிவாக உள்ளது. மொழிக் கலப்புக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழின் தொன்மையான இலக்கிய, இலக்கண நூலாசிரியர் தொல்காப்பியர், ‘வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’ என்று ஒரு விதியை வகுத்துள்ளார்.