

“ஆமாம் செய்மெய், இப்போது புரிகிறது” என்று நான் பதிலளித்தேன். அரங்கில் மொழிகளை இயந்திரங்கள் கற்றுக்கொள்ளும் காட்சிகள் ஒரு பக்கம் மாயாஜாலங்களைக் காட்டிக்கொண்டிருக்க, செய்மெய் என்னுடன் தொடர்ந்து உரையாடியது. இயந்திரங்கள் கற்றுக்கொள்வது என்கிற சிந்தனைகள் ஆலன் டூரிங் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றும் 1959 இல் ஆர்தர் சாமுவேல் என்கிற ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஒருவரே மெஷின் லேர்னிங் என்கிற பெயரை முதன்முதலில் கையாண்டார் என்றும் செய்மெய் கூறியது.
ஆனால், தொடக்கக் கால இயந்திரக் கற்றல் முறைகளில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், அப்போது தரவுகளும் அதிகமில்லை, கணிப்பொறிகளின் திறன்களும் அதிகமில்லை, அல்காரிதங்களும் போதுமான அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. “பொதுவாக, இயந்திரங்கள் கற்றுக்கொள்ளுதல் என்பதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன.