

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சாலையில் இருந்த நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன; இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. முதியவர் ஒருவர் பேருந்து மோதியதில் மரணமடைந்துள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நெருக்கடியான சூழலில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. எங்கோ ஒரு சம்பவம் இதுபோல அரிதாக நடந்தால் வழக்கமானதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடந்து வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலில் பேருந்துகளை இயக்குவது என்பதே சவாலான பணியாகிவிட்டது. அதுவும் காலை, மாலை நெரிசல் நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பாதசாரிகள் குறுக்கே செல்வது என ஏராளமான இடையூறுகளுக்கு மத்தியில் பேருந்துகளை இயக்க வேண்டிய நெருக்கடிக்கு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் ஆளாகின்றனர்.
நெரிசல் நேரங்களில் ஐந்து நிமிடங்களில் அடைய வேண்டிய தூரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகும் போது ஓட்டுநர்களும் விரக்திக்கும் படபடப்புக்கும் ஆளாகின்றனர். மெட்ரோ ரயில் பணிகள், பாலம் கட்டும் பணிகள் என ஆங்காங்கே பள்ளம் தோண்டுவதும், ஒருவழிப் பாதையாக மாற்றுவதும் பேருந்துகளை இயக்கும் பணியை மேலும் நெருக்கடிக்கு உட்படுத்துகிறது.
இது போதாதென்று போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து மாற்றம் என்ற பெயரில் கண்முன்னே தெரியும் இடத்திற்குச் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் கூடுதலாகச் சென்று, ‘யு டர்ன்’ எடுத்து மீண்டும் அதே இடத்திற்கு வரும் வகையில் செய்யப்படும் மாற்றங்கள் இன்னும் விரக்தியை ஏற்படுத்துகின்றன. நேரத்திற்கு சென்றடைய வேண்டி அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தம், விதவிதமான பயணிகளின் விநோத செயல்பாடுகள், ஊதிய உயர்வு பிரச்சினை, ஓய்வூதிய சிக்கல்கள் என பல்வேறு நெருக்கடிகளை பல முனைகளில் இருந்தும் ஓட்டுநர்களும், நடத்துநர்களுமே சந்திக்கின்றனர்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையே இதுபோன்ற சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. போக்குவரத்து துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் குறிப்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவமுகாம்கள் அமைத்து அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், உரிய உடல்நலன், மனநலன் சிகிச்சைகள் வழங்கி அவர்களையும் ஆரோக்கியமாக வைப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்.