

சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் மறக்கமுடியாத மழைக்காட்சியொன்று இடம்பெற்றுள்ளது. அதில் மழை எப்படித் துவங்குகிறது என்று மிக அழகாகக் காட்டியிருப்பார்கள். திடீரென வானம் இருண்டு கொள்கிறது. காற்றின் வேகத்தில் குளத்திலுள்ள தாமரை இலைகள் படபடக்கின்றன. கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசரமாக எடுக்கிறாள் அப்புவின் அம்மா. குளக்கரையில் இருந்த ஒரு மனிதனின் சொட்டைத்தலையில் விழுகிறது மழையின் முதல்துளி. அவன் உடனே தனது குடையை விரித்துக் கொள்கிறான்.
குளத்தில் மழைத்துளிகள் நடனமிடுகின்றன. காற்றோடு சேர்ந்து மழை வேகமெடுக்கிறது. நாயும் கூடப் பாதுகாப்பான இடம் தேடி ஒடுகிறது. சிறுவனான அப்பு மரத்தடி ஒதுங்கி நடுங்கியபடி நிற்கிறான். அவனது அக்கா துர்கா மழையில் நனைகிறாள். ஆனந்தமாக மழைத்துளிகளை முகத்தில் ஏந்துகிறாள். நாக்கைத் துருத்திக் காட்டி மழையினுள் விளையாடுகிறாள். ஓடுகிறாள். அவள் முகத்தில் சிரிப்பு. மழையின் வேகம் அதிகமாகிறது. காற்றின் ஓலம் கூடுகிறது. மரத்தடியில் நடுங்கியபடியே அக்காவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் அப்பு. அவனை நோக்கி ஓடி வந்து மரத்தடியில் அமர்ந்தபடி ஈரச்சேலையை அவனுக்குப் போர்த்திவிட்டபடி மழையை நிற்கச் சொல்லி துர்கா முணுமுணுக்கிறாள். மறக்க முடியாத காட்சியது.