

இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நுவரேலியாவின் மாவட்டச் செயலகப் பொது அரங்கம் மற்றும் கொழும்புச் சைவப் பேரவையென மூன்று இடங்களில் சூன் 30 தொடங்கி சூலை 06 வரை தமிழ்ப் பண்பாடு அனைத்துலக மாநாடு நடந்து முடிந்துள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாஸ்கரன் ஒருங்கிணைப்பில், அனைத்துலகப் பண்பாட்டுப் பேரவை, தமிழ்நாடு திருநெறிய சைவ சமயப் பாதுகாப்புப் பேரவை, பிரான்ஸ் நாட்டின் இந்திய வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பு, இலண்டன் தமிழ்க் கல்வியகம் மற்றும் உலகச் செம்மொழித் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இம்மாநாட்டில் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் தமிழர்கள் வருகை புரிந்திருந்தனர். குறிப்பாக, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, இலண்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயுனியன், இலங்கை உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுத் தமிழ்ப் பண்பாடு குறித்த தங்களின் ஆழமான ஆய்வுக் கருத்துகளை முன்வைத்தனர். போரும் பூசலும் மிகுந்து உலக மக்கள் அச்சத்தில் அலைக்கழிந்து கிடக்கும் இவ்வேளையில் தமிழர்கள், தங்களின் பண்பாட்டைக் காப்பது குறித்தும், முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை குறித்தும் விவாதித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல், அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை” என்கிறது கலித்தொகை. நல்லந்துவனார் வழியாக இவ்வுயரிய விழுமியங்களை உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள். ஒருவரின் மனமறிந்து நடந்து கொள்வதும், உறவுகளைப் போற்றிப் பாதுகாப்பதுமான உயரிய பண்பை இயல்பிலேயே தமிழர்கள் பெற்றிருந்தனர். பண்பாடு குறித்துத் தனிப்பட்ட முறையில் பல்வேறு கருத்திருக்கலாம். ஆனால் பொதுவில், பன்னெடுங்காலமாக தொடர்ந்து பேணப்படும் தனித்துவமான வாழ்வியல்முறை, மேலும் மேலும் பண்பட்டு, பண்பாடாக உருப்பெறுகிறது என்பது பொருத்தமாக அமையக்கூடும். பண்படுவதால் அது பண்பாடென பெயர் பெற்றது. இங்கு, பண்படுதல் என்பதை முழுமை பெறுதல், செழுமையடைதல், சீரடைதல் என்ற பொருளில் அணுக வேண்டும். அவ்வகையில் தமிழர்களின் பண்பாடு மற்றைய மாந்த இனங்களின் பண்பாட்டு ஒழுகலாறிலிருந்து மாறுபட்டும், வேறுபட்டும் இருப்பதோடன்றி, இன்றுவரை கொண்டாடத்தக்க கூறுகளைக் கொண்டதாக விளங்குகிறதென்பது கண்கூடு.
உலகின் மூத்த குடியெனப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த தமிழ்க்குடியின் காலமும், ஆழமும் எண்ணியெண்ணி வியக்கத்தக்க தரவுகளுடன் விரிந்து செல்கிறது. கீழடி அகழாய்வு, அதற்குக் கட்டியங்கூறும் அண்மைச் சான்றாகும். கீழடியின் தரவுகள் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இழுத்துச் சென்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை என்பது குறித்து விவாதித்தது ஒரு கட்டுரை. தமிழர்களின் பண்பாடு பல்வேறு நிலைப்பட்டதாகக் கிளைத்து விரிந்து நிற்கிறது. உலகின் முதல் மாந்தனின் ஆதிமொழி தமிழே என்பது மொழியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் துணிபு. மொழியின் வழியே செழிக்கத் தொடங்கிய பண்பாட்டுத் திறம் மரபு, விழுமியங்கள், கலை, கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம், அரசியல், நம்பிக்கைகள், வரலாறு எனப் பரந்து தமிழ் மண்ணைப் பண்பாட்டுப் பெருநிலமாக எழச் செய்திருக்கிறதெனில் மிகையன்று என்பது குறித்து ஆராய்ந்தது மற்றொரு கட்டுரை. ‘தமிழர்கள் உலகிலிருந்து எடுத்துக் கொண்டதும்; உலகிற்குக் கொடுத்துச் சென்றதும்’ என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்த கட்டுரை கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டுரை தமிழர்களின் படையல் பண்பாட்டை விரித்து எடுத்துரைத்தது. இவ்வாறு பலதரப்பட்ட தமிழியல் பொருண்மைகள் கட்டுரைகளாக மிளிர்ந்தன.