

குஜராத் மாநிலத்தில் மகிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கம்பீரா-முஜ்புர் பாலத்தின் 10-15 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. பாலத்தைக் கடந்து கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 15. நம் நாட்டில் விபத்துகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போக்குக்குக் கட்டுமானத் துறையும் விதிவிலக்காக அமையவில்லை.
ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் மட்டும் கட்டுமானத் துறை தொடர்பாக மூன்று விபத்துச் செய்திகள் வெளியாகின. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தவை. காரணங்களும் வேறு வேறானவை. ஆனால், அவற்றுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் இருந்தன.