

அரசு அளிக்கும் சலுகைகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன. அதேவேளையில், சலுகைகள் இருக்கும் இடத்தில் முறைகேடுகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை; அதற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வும் விதிவிலக்கல்ல. பூஜா கேட்கர் என்பவர் மனநலப் பாதிப்பு, கண் பார்வைக் குறைபாடு என்று மாற்றுத்திறனாளிக்கான சான்றை முறைகேடாகப் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஆனது ஓர் எடுத்துக்காட்டு.
மாற்றுத்திறனாளிகள் சட்டம் (1995) ஏழு வகையான குறைபாடுகளுக்குச் சிறப்புச் சலுகைகளை அளித்தது. அவற்றில் மனவளர்ச்சிக் குறைபாடு, தீவிர மனநோய்கள் ஆகியவையும் அடங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் (2016), சலுகைகளுக்குத் தகுதியுடையவை என 21 குறைபாடுகளைப் பட்டியலிட்டது.