

மக்களாட்சியில், அனைவருக்கும் ஒரே மதிப்புடைய வாக்கு இருப்பதை உறுதிசெய்கிறது இந்திய அரசமைப்பு. அந்த வகையில், நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடையே உள்ள மக்கள்தொகை வேறுபாட்டின் காரணமாக வாக்குகளின் மதிப்பு மாறுபடக் கூடாது என்பதற்காகத் தொகுதி மறுவரையறை என்பது அவசியமாகிறது. இந்தத் தொகுதி மறுவரையறையை 2026க்குப் பிறகான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி செய்ய வேண்டும் என்கிறது அரசமைப்பின் 84ஆவது சட்டத்திருத்தம்.
இந்நிலையில்தான், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதம் என்பது ஒரு விபத்தல்ல. தொகுதி மறுவரையறைத் திட்டம் தற்செயலானதும் அல்ல. பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் அதைத் தொடர்ந்து வரும் தொகுதி மறுவரையறையையும் செயல்படுத்துவதில் ஒரு மோசமான வடிவமைப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதேநேரத்தில், தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான மாநில அரசு இதையேதான் உள்ளாட்சிகளுக்குச் செய்துவருகிறது. இதை ஸ்டாலின் வார்த்தையிலேயே சொல்ல வேண்டும் என்றால், “28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தாமதம் என்பது ஒரு விபத்தல்ல. தொகுதி மறுவரையறை என்பதை அதற்குக் காரணமாக உயர் நீதிமன்றத்தில் கூறித் தீர்ப்புப் பெற்றதும் தற்செயலானது அல்ல” என்றுதான் கூற வேண்டும்.
ஆளுங்கட்சிகளின் திட்டங்கள்: தொகுதி மறுவரையறையைப் பொறுத்த வரையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதுபோல் விகிதாச்சார அடிப்படையில் (pro-rata) நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் (543) மாற்றம் இல்லாமல் மறுவரையறை செய்யப்பட்டால், பிஹாருக்கு 10, உத்தரப் பிரதேசத்துக்கு 11 தொகுதிகள் அதிகரிக்கலாம்; தமிழ்நாடு, கேரளத்துக்கு 8 தொகுதிகள் குறையலாம்.
அதுவே தொகுதிகள் 848 என்று அதிகரிக்கப்பட்டால் பிஹாருக்கு 39, உத்தரப் பிரதேசத்துக்கு 63 தொகுதிகள் அதிகரிக்கலாம்; கேரளத்துக்கு மாற்றம் இருக்காது; தமிழ்நாட்டுக்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இது உள்ளபடி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைவதையே காட்டுகிறது என்பதே தென்னிந்திய மாநிலங்களின் கவலையாகும்.
அதேவேளையில், அடுத்துவரும் மாநிலத் தேர்தலைக் கணக்கில் கொண்டு 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு உள்ளாட்சிகளின் தொகுதி மறுவரையறையைக் காரணமாக திமுக அரசு பயன்படுத்தி வருகிறது. 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அரசுகளின் பதவிக்காலம் ஜனவரி 5 உடன் முடிவடைந்தது.
அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் ஜனவரி மாதமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய உள்ளாட்சி அரசுகள் பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அரசு இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏற்கெனவே 2016இல் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்ததற்குப் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது என்பதையே காரணமாகக் காட்டியது.
பிறகு, 2019இல் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்தியது. பிறகு, ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும் நடத்தியது.
அப்போது, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே நின்று வென்றது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின், தன் கட்சிக்காரர்களின் இச்செய்கையால், தான் குற்றவுணர்வில் குறுகி நிற்பதாகவும், உடனே அவர்கள் பதவி விலகித் தன்னைச் சந்திக்குமாறும் அறிக்கை வெளியிட்டார்.
இதே நிலைமை இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வந்துவிடக் கூடாது என்றும், இது வருகின்ற மாநிலத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பாதிக்கும் என்றும் கருதியே, 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் நடத்திக்கொள்வது என்று திமுக தலைமை முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், மீதமுள்ள 9 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிந்து ஒரே தேர்தலாக நடத்துவோம் என்று திமுக அரசு இதுவரை கூறவில்லை.
நிர்வாகப் பின்னணி: 2016-2019 அதிமுக ஆட்சியைப் போன்றே, திமுகவும் உள்ளாட்சித் தேர்தலைச் சட்ட பூர்வமாகத் தள்ளிப்போடுவதற்குத் தொகுதி மறுவரையறையையே காரணமாகப் பயன்படுத்தியிருக்கிறது. அதாவது, டிசம்பர் 18, 2024இல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று முனியன் என்பவர் டிசம்பர் 20இல் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு அடுத்த நாளே விசாரணைக்கு வந்து, ‘முறையாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு இடஒதுக்கீடுகள் தரப்பட்ட பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 31), ஏறக்குறைய 376 கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி
களாக மாற்றவிருப்பதாக அரசு அறிவித்தது.
எப்படி நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதோ அதுபோல 376 ஊராட்சிகளின் பிரதிநிதித்துவமும் சுருக்கப்பட உள்ளது. அதாவது, 376 ஊராட்சி அரசுகள் கலைக்கப்பட்டு அவை நகர்ப்புற உள்ளாட்சியின் தொகுதிகளாக (Ward) மாற்றப்பட உள்ளன. இந்த நகரமயமாக்கல் முடிந்து முறையாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது அரசு.
அதாவது, இரண்டு வாரங்களில் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் (W. P (CIVIL) NO. 278 OF 2022), தொகுதி மறுவரையறையைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது எனவும், மாநிலத் தேர்தல் ஆணையமோ, மாநில அரசோ, ஏன் உச்ச நீதிமன்றமோகூட இதை மீற முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்களின்படி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையில் தொகுதி மறுவரையறைக் குழு உருவாக்கப்பட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கானகால அட்டவணையுடன் கூடிய ஒரு கடிதம் ஜூன் 21, 2024 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் நகர மயமாக்கல், தொகுதி மறுவரையறை பற்றிய விவரங்களை அரசு அளித்தவுடன் ஆகஸ்ட் 1க்குள் மறுவரையறையை முடித்துவிடுவோம் என்றும், அதைச் சரிபார்த்து இறுதி செய்வதற்கு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 1 வரை ஆகும் என்றும், இடஒதுக்கீட்டுச் செயல்பாடு நவம்பர் 1 முதல் நவம்பர் 15க்குள் முடிந்துவிடும் என்றும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
மாநில அரசின் கடமை: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும், 95 நாள்களுக்குள் அதாவது நவம்பர் 15க்குள் முடித்துவிடுவோம் என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கடிதத்தின் மீது அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதுபோன்று உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநிலத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லையெனில் தேர்தல் ஆணையம் உயர்/ உச்ச நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் (Civil Appeal No. 5756 of 2005) ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. இதிலிருந்து தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்தே உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுள்ளன எனக் கூறப்படும் காரணத்தைப் புறந்தள்ள முடியாது.
உள்ளாட்சி அரசுகள் கடைக்கோடி மக்களுடன் தொடர்புடைய அவர்களுக்கு நெருக்கமான அரசாங்கம் ஆகும். ஒன்றிய/ மாநில அரசுகளின் சட்டங்களையும் திட்டங்களையும் திறம்படச் செயல்படுத்தி, அதை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் உள்ளாட்சி அரசுகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, கட்சி நலன் சார்ந்து முடிவெடுக்காமல், மக்கள் நலன் சார்ந்து முடிவெடுத்து மக்களின் அவலத்தைத் தீர்ப்பதற்கு திமுக அரசு முன்வர வேண்டும்.
- தொடர்புக்கு: vinoth.sar@gmail.com