

இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்துவருவதைப் பார்க்க முடிகிறது. இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஏராளமான ஏற்ற இறக்கங்கள் இருந்ததைப் பலர் கவனித்திருக்கலாம். இன்றைக்கு இயற்கை விவசாயிகள், சிறு வணிகர்களைத் தாண்டிப் பெருநிறுவனங்களும் இந்தச் சந்தையில் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இத்தகைய சூழலில் இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை யார் கையில் இருக்க வேண்டும் என்று பேசுவது அவசியமாகிறது.
ஆரம்பக்கட்ட வளர்ச்சி: இந்திய வேளாண்மையில் வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துவந்ததன் விளைவாக, மண்வளம் பாதிப்படைந்தது. நீரின் அளவுக்கு அதிகமான தேவையால் நிலத்தடிநீர் மேலும் மேலும் ஆழத்துக்குச் சென்றது. உயிர்ப் பன்மை குறைந்துவந்தது. பயிர்ச் சுழற்சி முறையில் மாற்றம், விவசாயிகளின் உற்பத்திச் செலவுப் பெருக்கம், விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத விலை, கடன் தொல்லை, விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற காரணிகளால் இயற்கை வேளாண்மை முன்னுக்கு வந்தது.