ஆராய்ச்சி முறைகளைப் பொதுவெளியில் வைக்கலாமா?
அறிவியல் உலகில் ‘ஓபன் சயின்ஸ்’ என்னும் கருத்தாக்கம், சமீப காலத்தில் ஓர் இயக்கமாகத் தொடங்கி வேகமாக வளர்ந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. வெளிப்படைத்தன்மையின் காரணமாகப் பலரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றை மேம்படுத்த வழிவகுக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.
முக்கியக் குறிக்கோள்கள்: ஆராய்ச்சி தொடர்பான விவரங்களைச் சக விஞ்ஞானிகளிடம் மட்டும் பகிர்ந்துகொண்டால் போதாது; ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஒன்றோடொன்று தொடர்பில் இருந்தாலும் போதாது. மக்களுக்கு இந்தத் தகவல்கள் இணையம் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். சந்தா செலுத்தியோ வேறு விதத்தில் கட்டணம் செலுத்தியோ மட்டுமேதான் இந்த விவரங்களை அறிய முடியும் என்று இருக்கக் கூடாது; இலவசமாகவே பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
