

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மானுட உடலின் தனிப்பட்ட ஆற்றலால் நினைவுகளைச் சேகரிக்க முடிகிறது. இதனைத் தொடர்ந்து, அனுபவங்களைத் தொகுத்துக்கொண்டு அறிவையும் சேகரிக்க முடிகிறது. குழுவாக, சமூகமாகச் சேர்ந்து வாழும் மனிதர்களின் அறிவுசேகரம் பகிர்ந்துகொள்ளப்படுவது பொது அறிவு ஆகிறது. அது மொழியில் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு மனிதரின் பாரம்பரியமாக, பண்பாடாக விளங்குகிறது. ஒரு தனி உடலின் நினைவுசேகரம், அறிவுசேகரம் ஆகியவற்றால் உருவாவதை நாம் ‘சுயம்’ என்று அழைக்கலாம். அத்தகைய சுயம் மொழியினுள் நுழைந்து தனக்கென ஒரு பெயர் சூட்டப்படும்போது, அது சமூகம் கட்டமைத்த தன்னிலையை ஏற்கிறது. குறிப்பாக, தந்தையின் பெயரை அல்லது சமூக அடையாளத்தை ஏற்கிறது; அன்றாடத்தில் வேர்கொண்ட சுயம், தன்னிலை என்னும் வரலாற்றுக் கட்டமைப்பில் நுழைகிறது என்றும் கூறலாம்.