

மனிதன் பேசவும் எழுதவும் தொடங்கிய நாளிலிருந்து கற்றலும் தொடங்குகிறது. சிந்தனை, பேச்சு, எழுத்து யாவும் நனவுலகில் ஆராய்ந்து அறிந்து வெளிப்படுத்தும் முறைமையைப் பெற்றிருக்கின்றன. அடிப்படையில் இலக்கியம் ஓர் மொழிக்கலை. மொழி எனும் அடிக்கட்டமைப்பிலேயே இலக்கியக் கோபுரங்கள் எழுகின்றன.
மொழியைப் புரிந்து உள்வாங்காமல் இலக்கியத்தை நுகர முடியாது. தமிழ் போன்ற நீண்ட மரபுத் தொடர்ச்சிக் கொண்ட மொழியைப் பயிலும் ‘மொழிக்கல்வி’ முக்கியத்துவம் உடையது. பாணர்களின் வாய்மொழி மரபு தொடங்கி புலவர்களின் எழுத்து மரபு வரைப் பண்டைத் தமிழ்க்கல்வி வரலாறு நீண்டது. நவீன தமிழ்க்கல்விச் சுவடுகளை உ.வே.சா. எழுதிய என் சரித்திரத்திலும், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றிலும் காணலாம்.