

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் திமுக அணி மற்றும் பாஜக அணிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியான திமுக தலைமையில் வலுவான அணி தேர்தல் களத்தைச் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. அதிமுக-வும், பாஜக-வும் கூட்டணி அமைத்து எதிரணியாக வலுப்பெற்று வருகிறது. இதற்கிடையே, மூன்றாவது அரசியல் சக்தியாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனது கூட்டணிப் பாதையை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. திமுக-வுடன் விஜய் பேச்சுவார்த்தை, பாஜக மற்றும் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்த நிலையில், அவற்றை புறந்தள்ளி அவர் தனது நிலையை தெளிவுபடுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி 45.38 சதவீத வாக்குகளைப் பெற்று 159 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக தலைமையிலான அணி 39.71 சதவீத வாக்குகளைப் பெற்று 75 இடங்களைக் கைப்பற்றியது. சுமார் 5 முதல் 6 சதவீதம் வாக்குகளே ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் தீர்மானிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 6.58 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், தனியாக இத்தகைய ஒற்றை இலக்க சதவீத வாக்குகளை மட்டும் வைத்து எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2.62 சதவீத வாக்குகள் பெற்ற போதிலும் இதே நிலை தான். நடிகர் கமல் திமுக-வுடன் அணி சேர்ந்திருப்பதால் வரவுள்ள தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் திமுக அணிக்கே பலம் சேர்க்கும். நடிகர் விஜய் துவக்கியுள்ள கட்சி தேர்தல் களத்திற்குப் புதிது என்பதால், அந்தக் கட்சியின் பலம் என்ன என்பது வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஆதாரப்பூர்வமாக தெரியவரும்.
இருந்தாலும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்று நடிகர் விஜய் கட்சி வாங்கும் வாக்குகள் ஒற்றை இலக்கத்தில் இருக்காது என்பது அவருக்கு கிடைத்து வரும் ஆதரவைப் பார்க்கும்போது தெரியவருகிறது. மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், அவர்களது தாய், தந்தையரையும் அழைத்து பாராட்டு தெரிவித்து சாதாரண குடும்பங்களில் உள்ள பெண்களின் நல்லெண்ணத்தை நடிகர் விஜய் பெற்று வருகிறார்.
கணிசமான எண்ணிக்கையில் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் இதுபோன்று கிடைக்கும் பொதுமக்களின் ஆதரவு அவருக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏற்கெனவே வலுவாக உள்ள திமுக மற்றும் அதிமுக அணிகளை மீறி வாக்குகளைப் பெற்று வெற்றி தேடித் தருவது சந்தேகத்திற்குரியதே. இருந்தாலும் மக்களைப் பொறுத்தமட்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க இரண்டல்ல மூன்று வாய்ப்புகள் கண்முன்னே தெரிவது ஜனநாயகத்தின் நல்ல அம்சமாகவே அமைந்துள்ளது.