வயல் எலிகளின் கள்ளச் சேமிப்புதான் இலக்கியம்!- யவனிகா ஸ்ரீராம் பேட்டி
தமிழ்க் கவிதைச் சூழலில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு வெடிப்பை நிகழ்த்தி அரசியல் கவிஞராக அறிமுகமானவர் யவனிகா ஸ்ரீராம். வாழ்க்கைமுறையிலும், கலாச்சாரத்திலும், மக்களின் இயல்புகளிலும் உலகமயமாதல் காலகட்டம் ஏற்படுத்திய மாற்றங்களைக் கவிதைகளாக்கியவர். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தனது பாரம்பரியத் தொழிலை இழக்க நேர்ந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சிறுவியாபாரியாக அலைந்து திரிந்த அனுபவம் யவனிகாவுக்கு உண்டு. பயணங்களின் வாயிலாகவும் வாழ்வு தந்த அலைக்கழிப்பிலும் இந்திய நிலங்கள், கலாச்சாரம், வாழ்வு முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் கணங்களை நேரடியாக தரிசித்ததன் விளைச்சலாகவே யவனிகாவின் கவிதைகள் இருக்கின்றன. தனது கவிதைகளில் யவனிகா நிகழ்த்தும் கற்பனைகளின் பாய்ச்சல் அசாத்தியமானது. தனித்துவமானதும்கூட. சமீபத்தில் வெளியான ‘யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்’ என்ற மொத்த கவிதைகளின் தொகுப்பு பெரும் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. 1993-லிருந்து எழுதத் தொடங்கிய யவனிகாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
ஏன் எழுதுகிறீர்கள்?
அன்பின் நிமித்தம் பைத்தியக்காரத்தனத்தைப் பகிர்வதாகவோ அல்லது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மனித சாராம்சத்தை அச்சமின்றி கலைத்துப்போடுவதாகவோ எழுத்தை நினைக்கிறேன். வயல் எலிகளின் கள்ளச் சேமிப்புதான் இலக்கியம். பல துளைகளின் வழியே அவை வெளியேறும் வளைகளைப் பகுப்பதும்தான்.
எந்த நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது?
எப்போதும் பகல் நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருப்பதில்லை. நள்ளிரவு மற்றும் நீண்ட பயணப் பொழுதுகளில்தான் எழுதுவதற்கான மனநிலை எனக்கு உருவாகிறது. எழுத ஆரம்பித்த காலம் தொட்டு இப்போது வரை அநேகமாக எல்லா படைப்புகளும் இரவிலும், பயணங்களிலும் எழுதப்பட்டவைதான். இரவில் அரை உறக்க நிலையில் தோன்றும் எண்ணங்கள் பின்னர் எழுதுவதற்கான மூட்டத்தை உருவாக்குகின்றன.
உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?
2004-ல் வெளியான ‘கடவுளின் நிறுவனம்’ தொகுப்பு கடுமையான சவாலாக இருந்தது. என்னுடைய 30 வயதில் வணிகம் சார்ந்து அதிகம் பயணத்தில் இருந்த காலகட்டத்தில் சுமார் 8 ஆண்டு காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அந்த நூல். குடும்பம், தத்துவம், பொருளியல் கொள்கைகள், சமயங்கள் என எல்லாவற்றுக்குமான ஒரு விடுதலையைத் தேடினேன். தொழில் புரட்சியின் விளைவாகப் பொருட்கள் அதிகமாக உற்பத்தியாக்கப்பட்டு சந்தைமயமான காலத்தில் வீட்டுப் பொருட்கள் மட்டுமல்லாமல் ரயில், விமானம் என எல்லாமே நவீனப் பெருக்கத்துக்கு உள்ளாகின. வணிகத்துக்காகப் பல நாடுகளில் அலைந்ததிலிருந்து கிடைத்த நகர்மயமான உலகு குறித்த அறிவும், தமிழ் மரபில் இருக்கக்கூடிய தத்துவங்களுடனான பரிச்சயமும் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும், அதோடு நான் கொண்ட முரண்பாடுகளும் முழுமையாக அத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கிறது. கட்டமைக்கப்பட்ட சுயத்திலிருந்தும் முற்றிலுமாக வெளியேறிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு அது. ஆகவே, என்னுடைய எழுத்து வாழ்க்கையை ஏறக்குறைய பூர்த்தியாக்கிய படைப்பு என்று ‘கடவுளின் நிறுவனம்’ தொகுப்பைச் சொல்லலாம். மறைந்த கவிஞர் அப்பாஸ், “இந்தப் புத்தகத்தை எழுதி முடித்ததால் இனி நீ இறந்துபோனாலும் தவறொன்றும் இல்லை” என்று சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?
பொருளாதாரச் சூழல் சரியாத இல்லாத வேளை. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி உருவாகும்போது. சுயபச்சாதாபம் எழுகிற வேளை. படைப்புகளுக்கு உரிய கவனம் கிடைக்காமல் போகிற வேளைகளில் சோர்வு உண்டாகும். மற்றபடி அன்றாட வாழ்வில் எல்லோரும் உணரும் சோர்வு எனக்கு உண்டு.
எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?
‘எல்லோரும் எழுதும் மொழியை எடுத்துக்கொண்டு யாரும் சொல்லாதவற்றைச் சொல்லிவிட வேண்டும்’ என்கிற கூற்று மிக இளம் வயதில் என் மனதில் பதிந்துவிட்டது. புகழ்பெற்ற ஜெர்மானியக் கவிஞரான பெர்டோல்ட் பிரெக்ட் “அதிக ரொட்டி சுடப்படுபவன் என்பதற்காக ஏன் என்னுடைய பெயர் நினைவு கூறப்பட வேண்டும்” என்ற வரிகளை எப்போதும் நினைத்துக்கொள்வேன். எல்லாவற்றுக்கும் மேலாக பிரெஞ்சு தத்துவ மேதை மிஷெல் ஃபூக்கோ சொல்வதைப் போல “எழுதாமல் ஏன் ஒரு படைப்பாளியால் இருக்க முடியவில்லை” போன்றவை எனக்கு எழுதுவதற்குக் கிடைத்த சிறந்த அறிவுரைகளாகும்.
இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஒவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?
எனக்கு ரொம்ப முக்கியம் பயணம்தான். பயணிக்கிறபோதுதான் எனக்குரிய விஷயங்களைப் புதிதாகக் கண்டடைகிறேன். காரணம், பயணங்களின்போது நான் பார்க்கிற காட்சிகள் எனக்குள்ளே படைப்பாற்றலாக நுழைகின்றன. சாலையில் நடந்துசெல்லும் எழுத்தாளன் இயல்பாக நடக்கிற நிகழ்வுகளை வித்தியாசமாகப் பார்க்கிறபோதுதான் படைப்பு உருவாகிறது. புராதனப் பொருட்களைச் சேகரிப்பவன்போலவும், அருங்காட்சியகத்தில் வைப்பதற்காகச் சேகரிக்கப்படும் பொருட்களைப் போலவே என் கவிதைகளுக்கான காட்சிகளைப் பயணங்களிலிருந்து நான் எடுக்கிறேன். பயணம் படைப்பாளிக்கு எல்லைகளை மீறிச்செல்லும் துணிவைத் தருகிறது.
கற்பனாவாதத்தைவிட நேரடியாகப் பார்க்கும் விஷயங்கள் உண்மையாக இருப்பதால் ஒரு விஷயத்தை சிறப்பாக உருவாக்க முடியும். இசை, அதனுடைய தொடர் வழியில் இருக்கிறது. ஓவியங்கள் குறித்து அறிதல் முறை தேவைப்படுகிறது. சமீபமாகத்தான் திரைப்படங்களை அதன் திரைமொழி வழி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?
எட்வர்ட் ஸெய்த் எழுதிய ‘ஓரியண்டலிசம்’ நான் வாசிக்க விரும்பிய புத்தகம். ஆங்கிலத்தில் நேரடியாக வாசிப்பதில் எனக்கு சிக்கல்கள் உள்ளதால் தமிழ் மொழிபெயர்ப்பு வந்தால் உடனடியாக வாங்கி வாசித்துவிடுவது என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இதுவரையில் தமிழில் நான் வாசித்த எல்லா படைப்புகளுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. வரலாற்றை மறுபடியும் எழுதிப்பார்த்தல், சுயசரிதை தன்மை பொருந்திய எழுத்துகள் என அவற்றுக்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
அது இந்திய வாழ்க்கையாகவும் நானும் அதில் இருப்பதால் எனக்கு அவை அதிசயமாகத் தெரியவில்லை. அயல்மொழி படைப்புகள் என்பதற்காக மட்டுமே அவற்றை வாசிக்காமல் வாசகனுக்கு சவாலாக அமையும் படைப்புகளைத் தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன்.
இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?
இலக்கியம் என்பது ஒருவர் சார்ந்திருக்கும் எல்லா விஷயங்களிலிருந்தும் புறவயமாக வெளியே நிகழ்கிற ஒரு அம்சமாகவும் தனிச்சிறப்பான கவனத்தைக் கோரும் ஒரு விஷயமாகவும் இருக்கிறது. ஆயினும், இலக்கிய ஆர்வம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. இலக்கிய வாசிப்பினால் அறிவு மேம்படுகிறது என்பதைவிடவும் வாழ்வின் புதிர்களை அது விடுவிக்கிறது.
வாசகர்களுக்கு அனுபவங்களின் தொகுப்பாகக் கிடைக்கிறது. பொருளாதாரரீதியில் வாழ்க்கையை நன்றாகக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், இலக்கிய வாசிப்பு நிச்சயம் ஒருவரைப் பண்படுத்தும். தன்னளவில் தன் மனதை செம்மையாக வைத்துக்கொள்வார்கள். அவர்கள் எழுதாவிட்டாலும்கூட வாசிப்பதன் மூலம் இன்பமாக இருப்பார்கள். உண்மையில், எழுதுபவர்களைவிட வாசிப்பவர்கள்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த வகையில் கலை ஒரு அறிவியல்தன்மை பெறுகிறது. அறிவியல்தன்மை பெறுவதோடு மற்றமைமீதான புரிந்துணர்வாகவும் மாற்றம் காண்கிறது.
