

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் முழக்கத்துடன் அரசு சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதைப்பொருள்கள் எளிதில் கிடைப்பதும், அவற்றின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருவதும் மிகுந்த கவலையளிப்பவை.
கள யதார்த்தம்: கிராமம், நகர்ப்புறக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற ஒரு கருத்தரங்குக்கு அண்மையில் சென்றிருந்தேன். பேராசிரியர்களில் பலர் தங்கள் வகுப்பில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறவர்கள் இருப்பதை மிகுந்த அச்சத்துடன் முதலில் பகிர்ந்துகொண்டார்கள். பிறகு, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மாணவர்களுக்கு எப்படிப் போதைப்பொருள்கள் கிடைக்கின்றன, அவர்கள் பயன்படுத்தியதைப் பேராசிரியர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள், மாணவர்களை மீட்க என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் கலந்துரையாடல் நடந்தது.