

இந்திய விமானப் படையின் சோதனை ஓட்ட விமானியாக இருந்த 35 வயது ராகேஷ் சர்மா, 1984இல் இரண்டு விண்வெளி வீரர்களைக் கொண்ட சோவியத் ஒன்றியக் குழுவுடன் ‘சல்யுட் 7’ என்னும் விண்வெளி நிலையத்தில் எட்டு நாள்கள் தங்கினார். இதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினார். விண்வெளி உடையில் புன்னகை புரியும் இளம் ராகேஷ் சர்மாவின் புகைப்படம், இந்தியர்களின் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்திருக்கிறது.
தனது பயணத்தில், ரிமோட்-சென்சிங்கிலும் உயிரி மருத்துவத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார். விங் கமாண்டராகப் பணிபுரிந்து 2001இல் ஓய்வுபெற்று, தற்போது குன்னூரில் வசிக்கிறார். ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்காக (2003 பிப்ரவரி 28) அவர் அளித்த பேட்டியிலிருந்து...