

கோடை விடுமுறைக்குப் பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் ஜூன் 16 முதல் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கிவருகின்றன. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1,600-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 179 அரசுக் கல்லூரிகள், 162 அரசு உதவிபெறும் கல்லூரிகள். மீதமிருப்பவை தனியார் சுயநிதி கல்லூரிகள். தற்போதைய நிலையில், வருடம் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
சில மாணவர்களுக்குத் தாங்கள் விரும்பிய பாடம் கிடைக்கலாம். பலருக்கு கிடைப்பதைப் படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும், பட்டப்படிப்பு படிக்க வருபவர்கள், பல கனவுகளோடு வருவார்கள். அவை, நேரடியாகப் பாடங்களோடு தொடர் புடையதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவற்றைச் சீர்படுத்த வேண்டியது கல்லூரிகளின் தலையாய கடமை.