

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு மானுடவியலின் மற்றொரு வியத்தகு கண்டுபிடிப்பு பல்வேறு ஆதிவாசிச் சமூகங்களிலும் ஏதோ ஒருவகையில் இறைவழிபாடு இருந்தது என்பதுதான். மானுட சுயம் தன் நினைவுசேகரத்தை அறிவுசேகரமாக மாற்றி, சமூக உறவுகளை நிலைப்படுத்த வேண்டுமென்றால், சுயத்தைத் தன்னிலையாகக் கட்டமைக்க வேண்டுமென்றால், மற்றமையை ஒரு புள்ளியில் குவித்து அடையாளப்படுத்தாமல் அதனைச் செய்வது கடினம் எனலாம்.