

ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் விலகிச் செல்வதால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பாலம் வழியாகவே செல்கின்றன.
நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் இந்த மேம்பாலம், திடீரென விலகிய நிலைக்கு சென்றதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் நடப்பதற்கு முன்பே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் பாலம் கட்டுமான பாதுகாப்பு நிபுணர்கள் நேரில் சென்று பாலத்தின் கட்டுமானம், விலகிச் செல்வதற்கான காரணம், சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. இருந்தாலும், அன்றாடம் அதிக வாகனம் செல்லும் பாதை என்பதால் அப்பகுதியை ஒட்டிய 2 கிலோ மீட்டர் தொலைவை கடக்க 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 700 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், 2002-ம் ஆண்டு கட்டப்பட்டு 23 ஆண்டுகளாக எந்த சேதமும் இல்லாமல் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு சாலை கட்டுமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது. அந்த மேம்பாலத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகம் என்பதால் கட்டுமானம் விலகி பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், சென்னை – பெங்களூரு மற்றும் சேலம் – பெங்களூரு வழித்தடம் என்பது மிக முக்கியமான வர்த்தக வழித்தடமாகவும் இருப்பதால் கனரக வாகனங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெறுவதை குறைகூற முடியாது. அவை அனைத்தையும் மனதில் கொண்டே பாலங்களின் உறுதித்தன்மை இருக்க வேண்டும். அதற்கேற்ப கூடுதல் தாங்கும் திறனுடன் பாலங்கள் அமைவதை பொறியாளர்களும் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் தொப்பூர் கணவாய் தொடர் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், இதுபோன்ற பாலங்களில் ஏற்படும் விரிசல்கள் அத்தியாவசியவழித்தடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சியையே பாதிக்கும். பிரதான வழித்தடங்களுக்கு மாற்று வழித்தடம் உருவாக்க வேண்டிய அவசியத்தையும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் நினைவூட்டுகின்றன.
8 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட மாற்று வழித்தடம் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும் வாகன ஓட்டிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த திட்டத்தை செயல்படுத்துவதுடன் எவ்வளவு விரைவாக பாலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரிசெய்து வாகனப் போக்குவரத்தை சீராக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செய்து முடிப்பதும் அவசியம்.