

இந்தாண்டுக்கான சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லட்சுமிஹருக்கு ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ (யாவரும் பதிப்பக வெளியீடு) சிறுகதை தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான லட்சுமிஹர் படத்தொகுப்பில் ஆர்வம் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் பங்காற்றி வருகிறார்.
லட்சுமிஹரின் மொழி, உரைநடை மொழி அமைப்பைவிடக் கவிதைக்கான மொழியமைவுக்கு (Syntax) நெருக்கமாக உள்ளது என்பதே அவரது பலமும் பலவீனமும் ஆகும். நில அளவையாளர் - அகழ்வாராய்ச்சியாளர் என எழுத்தாளர்களை இரண்டாக வகுக்கலாம் எனத் தோன்றும். யுவன் சந்திரசேகர் ஒரு கதைக்கு ‘அகழ்வாராய்ச்சி’ என்று தலைப்பிட்டிருப்பார். இலக்கியமே ஒரு அகழ்வாராய்ச்சி. எல்லா இலக்கியவாதிகளும் அகழ்வாராய்ச்சியாளர் தான் என்று காண இடமுண்டு. உள்ளிருந்து அகழ்ந்து அரிய உண்மையை மீட்கும் முயற்சி.லட்சுமிஹரும் நேர்மையாக அதற்குத்தான் முயல்கிறார். அகத்தை ஊடுருவிகாணும் எழுத்துமுறைக்கு வலுவான சொற்கலன் இருப்பது அவசியம். மரபிலக்கிய கற்றல் வழி அந்த செழுமையை எட்டிய பிரமிளை ஒரு முன்மாதிரியாக சொல்லலாம். லட்சுமிஹரின் சிடுக்கான மொழியில் சில போதாமைகளை உணர முடிகிறது. மொழி மீதான ஆளுகை கூடுந்தோறும் அவரது படைப்புலகம் இன்னும் ஆழம் பெறும் என எண்ணுகிறேன்.
லட்சுமிஹரின் கதை மாந்தர்கள் தனிமையில் உழல்பவர்கள். அவர்கள் தங்களைப் போன்ற சக தனியர்களைக் கதைகளின் ஊடாக கண்டு கொள்கிறார்கள். கரிசனமும் குரூரமும் மாறிமாறி ஒரு விளையாட்டை போல் நிகழ்கிறது. தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ கதையில், கதை சொல்லி பேபி எனும் கிழவியை தேவாலயத்தில் சந்தித்து தினமும் கதை பேசுகிறான். ஒரு விளையாட்டு போல தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல் பத்திரங்களை எடுத்து வாசிக்க சொல்லுகிறார் பேபி. வேண்டுதல்கள் ரகசியமானவை. அந்தரங்கமானவை. நோயுற்றிருக்கும் கதைசொல்லி அந்த வேண்டுதலை வாசித்து தொந்திரவுக்கு உள்ளாகிறான். வாழும் இச்சை அவனை இயக்கும் போது, மரணத்தை வேண்டுதலாக தேவனிடம் கோருபவரை சந்திக்க வேண்டும் என எண்ணுகிறான். அந்த வேண்டுதல் பேபியினுடையதாக அவனுக்குள் ஒலிக்கிறது. பேபியை தேடி வரும்போது அங்கே அவளுடைய அதே வடிவத்தை கொண்ட ஓர் அழுக்கு மூட்டை மட்டுமே எஞ்சியிருக்கிறது. வேண்டுதல் பத்திரங்களால் ஆன ஓர் அழுக்கு மூட்டையாக ஒரு மனிதர் உருமாறுகிறார் என்பதொரு விசித்திரமான ஆழ்மன வெளிப்பாடு. பேபி அவனை தவிக்கவிடுகிறார். உண்மையில் அவர் கரிசனம் கொண்டவரா அல்லது அவனை மாட்டிவிட்டாரா? இரண்டு சாத்தியங்களையும் இக்கதை அளிக்கின்றது.