

கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவரை அண்டை மாநில மொழிகளில் வெளிவரும் சிறார் படைப்புகள் குறித்த வியப்பிலிருந்த தமிழ்ச்சிறார் இலக்கியம் இப்போது அவர்களே வியக்கும்வண்ணம் புதிய திசைகளில் புதிய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், போன்ற சமகாலப்பாடுபொருட்களைப் படைப்புகளில் பேசத் தொடங்கியிருக்கிறது.
தன் தனித்துவமான படைப்புகள் மூலம் புதிய திசையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது அவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா' என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அர்ப்பணிப்பு மிக்க அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். கவிஞராகவும், இதழாளராகவும், சிறார் எழுத்தாளராகவும் விளங்குகிற விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த இரண்டு வருடங்களில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாணவர்களிடம் தலைகாட்டும் சாதிப்பாகுபாடு குறித்து அவர்களுடைய தோளில் கை போட்டு உரையாடும் அற்புதமான படைப்பாகக் கயிறு கதைப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் வித்தியாசமான, தனித்துவமான கருப்பொருளுடன் எழுதும் விஷ்ணுபுரம் சரவணன் ‘ஒற்றைச்சிறகு ஓவியா’வில் சமகாலத்தின் மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றி குழந்தைகளிடம் பேசுகிறார். இந்த நூலை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்டிருக்கிறது.